புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகார வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் கடந்த மாதம் 26 ஆம் தேதி கண்டறியப்பட்டு அன்றே வெள்ளனூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணா சுந்தர் உத்தரவின் பேரில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட காவல் குழுவினரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இறையூர் வேங்கைவயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின சமூக மக்களையே குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக போலீசார் விசாரணைக்கு அழைப்பதாக அந்த சமூகத்தின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டுகளை முன்னெழுப்பி வந்தனர். இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக மாவட்ட காவல்துறையின் சார்பில் ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய முழு முயற்சியையும் ஒளிவு மறைவின்றையும் வெளிப்படைத்தன்மையுடனும் மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும், இதுவரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 36 சாட்சிகள் பிற சமூகத்தைச் சேர்ந்த 49 சாட்சிகள் என 85 சாட்சிகளிடம் விசாரித்து வாக்குமூலம் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியானது ஆய்விற்காக சென்னை அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகளை அடையாளம் கண்டு கைது செய்வது தொடர்பாக உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி விசாரணை நேர்மையுடன் நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவாக அடையாளம் கண்டு கைதுசெய்யவும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தவிட்டுள்ளார்.