குற்றம்

ஏரியில் மர்ம நபர்களால் கொட்டிச் செல்லப்பட்ட கெட்டுப்போன மீன்கள் - பொதுமக்கள் அவதி!

ஏரியில் மர்ம நபர்களால் கொட்டிச் செல்லப்பட்ட கெட்டுப்போன மீன்கள் - பொதுமக்கள் அவதி!

Sinekadhara

உளுந்தூர்பேட்டை பெரிய ஏரியில் கெட்டுப்போன மீன்களைக் கொட்டிச்சென்ற மர்ம நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனை எதிரே பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் முழுஅளவு தண்ணீர் இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து அந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. அங்குள்ள கால்நடைகளும் இந்த தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஏரியில் உள்ள தண்ணீரை மாசுபடுத்தும் வகையில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கெட்டுப்போன மீன்களை ஏரியில் கொட்டிச் சென்றுள்ளனர். இதனால் சென்னை - சேலம் நெடுஞ்சாலை வழியாக செல்லும் பொதுமக்களுக்கு துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து முன்கூட்டியே கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், கொட்டிய நபர்கள்மீது அரசு அதிகாரிகளும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.