ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற நிறுவனங்களைத் தவிர போலி நிறுவனங்களில் முதலீடு செய்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் எஸ்.பி.ஜெயச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை அசோக் நகர் காவலர் பயிற்சி குழுமத்தில் பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் எஸ்.பி.ஜெயச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நிதிநிறுவனங்கள் என்ற பெயரில் பங்குச் சந்தை, ஆன்லைன் வர்த்தகம், நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக அளவில் வட்டி பெறலாம் என பொதுமக்களை ஏமாற்றி பல மோசடிகள் நடப்பது பெருகியுள்ளாதாக தெரிவித்தார்.
அதில் குறிப்பாக சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட், lns international financial service மற்றும் திருச்சியை தலைமையிடமாக கொண்ட எல்பின் இ.காம் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் அதிக அளவில் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த மோசடி பட்டியலில் ஆருத்ரா தங்கம் நிறுவனத்தில் சுமார் 93 ஆயிரம் பொதுமக்கள் 2124 கோடியே 98 லட்சம் ரூபாய்க்கு முதலீடு செய்துள்ளனர். அதில் 95 வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டதில் 85 கோடி ரூபாய் காவல்துறையினரால் முடக்கம் செய்யப்பட்டதாகவும், 150 கோடி ரூபாய் சொத்துகளை கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் எல்பின் இ காம் நிறுவனத்தில் சுமார் 7000 பொதுமக்கள் 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். எல்என்எஸ் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் பொதுமக்கள் 6000 கோடிக்கு மேலாக முதலீடு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நிதி நிறுவனங்களால் மோசடி செய்யப்பட்ட பணத்தை வைத்து ஆடம்பர பங்களாக்கள், சொகுசு கார்கள், நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்தவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளில் பொருளாதார குற்றப்பிரிவு துறை ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தமாய் 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதனடிப்படையில் 1160 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளது எனவும் அதில் 250 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு அதில் 27 ஆயிரத்து 500 முதலீட்டாளர்களை கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற நிறுவனங்களைத் தவிர்த்து மற்ற போலி நிறுவனங்களில் முதலீடு செய்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.