குற்றம்

காய்கறி விற்பனை செய்வதுபோல் நடித்து ஆடு திருடிய கும்பல் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

காய்கறி விற்பனை செய்வதுபோல் நடித்து ஆடு திருடிய கும்பல் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Sinekadhara

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சரக்கு வாகனத்தில் ஆட்டுக்குட்டிகள் திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அருப்புக்கோட்டை கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ்(36). இவர் ஆடுகள் வளர்க்கும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், தனது வீட்டின் வெளியே ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு தன்ராஜ் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது சிலர் சரக்கு வாகனத்தில் தன்ராஜ் வளர்க்கும் ஆடுகளை திருட்டுத்தனமாக ஏற்றிக்கொண்டு இருப்பது தெரியவந்திருக்கிறது.

இதைப்பார்த்து தன்ராஜ் சத்தம் போட்டதும் ஆடுதிருடர்கள் தப்பி ஓட முயன்றனர். அதற்குள் அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து ஆடு திருடும் கும்பலில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் உடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் ஆடு திருடியவரையும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்றனர்.

அங்குவைத்து நடத்திய விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் பூமி(38) என்பதும், அவர் காய்கறி விற்பனை செய்வது போல் வந்து ஆடுகளை திருடிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பூமி மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் வேறு எங்கெல்லாம் இதுபோன்று ஆடுகள் திருடினார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.