சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அருகே மதுபோதையில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் நோக்கி சென்றுகொண்டிருந்த தடம் எண் 77 பேருந்து, காசி திரையரங்கம் அருகே சென்றபோது குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் அருகிலிருந்த இரும்பு பலகையை எடுத்து பேருந்தின் பின்பக்க கண்ணாடியை தாக்கி உடைத்துள்ளார். இதில் பேருந்தின் உள்ளே அமர்ந்திருந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் கீழே இறங்கினர். மேலும் அருகிலிருந்த பொதுமக்களும் திரண்டு போதையில் இருந்த வாலிபரை சராமரியாகத் தாக்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமரன் நகர் போலீசார், மது போதையின் உச்சத்தில் இருந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு கொண்டுசென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் குடிபோதையில் சாலையில் சென்ற வாகனத்தை வேண்டுமென்றே உடைத்தாக ஒப்புக்கொண்டதால், பேருந்தின் ஓட்டுநர் பாலசுப்ரமணியம் மற்றும் நடத்துநர் கண்ணதாசன் அளித்த புகாரின் அடிப்படையில் கிண்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்த குமரன் நகர் போலீசார், அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.