சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் கைதி தப்பியோடியது தொடர்பாக சிறப்பு எஸ்ஐ உட்பட 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி அருகே உள்ள மேல்கொத்த குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (72). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (55) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மோகனின் மகன் சிவராமன் தனது மனைவி விஷ்ணு பிரியாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ராஜேந்திரனின் மகன் சத்யராஜ் அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு சிவராமன் மற்றும் அவருடைய மனைவியை கத்தியால் வெட்டியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த இருவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேல்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சத்யராஜை கைது செய்தனர். இதைடுத்து சத்தியராஜை குடியாத்தம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்திவிட்டு கிளை சிறையில் அடைக்க அழைத்து சென்றபோது காவல் துறையினரை தள்ளிவிட்ட சத்யராஜ், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இது தொடர்பாக குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சத்யராஜை தேடி வருகின்றனர். இந்நிலையில் கைதியை தப்பவிட்ட மேல்பட்டி சிறப்பு எஸ்ஐ சங்கரன், காவலர்கள் பாலாஜி, ஜலாலுதீன் ஆகிய மூவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வேலூர் எஸ்.பி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.