கைதான சிவ்குமார் கோப்பு படம்
குற்றம்

பாபா சித்திக் கொலையில் சிக்கிய முக்கியக் குற்றவாளி! பொறி வைத்துப்பிடித்த போலீசார்! சிக்கியது எப்படி?

தேசியவாத காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி கைது.

சண்முகப் பிரியா . செ

கடந்த அக்டோபர் 12-ம் தேதி தேசியவாத காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். மும்பை, பாந்த்ராவில் உள்ள அவரது மகன் அலுவலகத்திற்கு எதிரில் அடையாளம் தெரியாத நபரால் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலையில் நேரடியாக ஈடுபட்டவர்களில் தர்மராஜ் மற்றும் சுனைல் ஆகிய இருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், சித்திக்கை தொடர்ந்து 6 முறை துப்பாக்கியால் சுட்ட சிவ்குமார் என்பவர் போலீசில் சிக்காமல் தப்பிவிட்டார். அவரைப் பிடிக்க மும்பை போலீஸார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். சிவ்குமாரைக் கைதுசெய்ய 5 அதிகாரிகள் உட்பட 21 பேர் கொண்ட தனிப்படையை அமைக்கப்பட்டது.

கைதானவர்கள்

சிவ்குமார் பஹ்ரைச் (உத்திரபிரதேசம்) தான் சென்று இருக்கவேண்டும் என்று உளவுத்துறையில் இருந்து தகவல்கள் கிடைத்ததையடுத்து அங்கு விரைந்த போலீசார் 25 நாட்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பஹ்ரைச் பகுதியில் சிவ்குமாருக்கு வேண்டப்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 35 பேரை தீவிரமாகக் கண்காணித்ததில் சிவ்குமாரின் நண்பர்கள் நான்கு பேர் போலீசில் சிக்கியுள்ளனர். இரண்டு இரு சக்கர வாகனங்களில் புறப்பட்டு சென்ற சிவ்குமாரின் நண்பர்கள் நால்வரையும் மடக்கி பிடித்த போலிசார் சிவ்குமாரின் இருப்பிடம் குறித்து விசாரணை செய்துள்ளனர். அதில் சிவ்குமார் பதுங்கி இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிவ்குமாரை மடக்கிப் பிடித்து கைதுசெய்துள்ளனர்.

இக்கொலை தொடர்பாக இதுவரை மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். சிவ்குமாருடன் அவர் கூட்டாளிகள் நான்கு பேரும் பிடிபட்டுள்ளனர். கைதான சிவ்குமாரிடம் போலிசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் சொல்லியே, பாபா சித்திக்கை கொலை செய்ததாக ஷிவ் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். அன்மோல் பிஷ்னோய் சமூக வலைதளமான ஸ்னாப் சாட்டின் மூலம் குற்றவாளிகளை தொடர்பு கொண்டு பேசி, உத்தரவுகளை பிறப்பித்ததாகவும், லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய நண்பராக பார்க்கப்படும் சுபம் லோங்கரின் உதவியால், அன்மோல் பிஷ்னோயை ஷிவ்குமார் பலமுறை தொடர்பு கொண்டு பேசியதும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிவ்குமார் இன்று மும்பைக்கு அழைத்து வரப்பட்டு மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். பின்னர் சிவ்குமாரை மற்ற கைதிகளுடன் வைத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அதிகரித்துவிட்டதால் வன்முறை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அதனால் அவர்களை மும்பை புறநகரில் இருக்கும் தலோஜா சிறைக்கு மாற்ற மும்பை போலீஸார் திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.