ஆசை வார்த்தை கூறி 45 லட்சத்தை வாங்கிக்கொண்டு திருப்பிக் கேட்டால் சூனியம் வைத்து விடுவேன் என மிரட்டும் சாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பொதிகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி(50). இவர் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்றில் உற்பத்தி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர், ஆலயங்களுக்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவ்வாறு செல்லும்போது திருவலம் பகுதியில் சர்வமங்கள பீடத்தை நிறுவிய சாந்தகுமார் என்ற சாமியாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சில மாதங்கள் கழித்து தான் பெரிய தொழில் செய்து வருவதாகவும், அதற்கு நீங்கள் முதலீடு செய்யும் பட்சத்தில் 10 லட்ச ரூபாய் கொடுத்தால் 3 மாதத்தில் அதை 5 கோடியாக திருப்பி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய கேசவமூர்த்தி, 2010ம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரையில் தன்னுடைய பணம் மட்டும் இல்லாமல் பலரிடமிருந்து பணத்தை பெற்று சுமார் 45 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.
சுமார் 4 வருடங்களாக எந்த பணத்தையும் திருப்பி அளிக்காத நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கேசவமூர்த்தியிடம், சாந்தகுமார் வழங்கியுள்ளார். ஆனால் அந்த காசோலை வங்கியில் செல்லாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சாந்தகுமாரிடம் கேட்டபோது, சூனியம் வைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேசவமூர்த்தி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.