குற்றம்

கேரளா: இறைச்சிக்காக கர்ப்பமாக இருந்த காட்டெருமையை வேட்டையாடி கொன்றவர்கள் கைது 

கேரளா: இறைச்சிக்காக கர்ப்பமாக இருந்த காட்டெருமையை வேட்டையாடி கொன்றவர்கள் கைது 

EllusamyKarthik

(கோப்பு புகைப்படம்)

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சக்கிக்குழி வனச்சரக அதிகாரிகளுக்கு, கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி சிலர் காட்டு விலங்கு ஒன்றை வேட்டையாடி, அதன் இறைச்சியை சாப்பிடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அன்றிரவே அந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடிய வனச்சரக அதிகாரிகள் அவர்களை பிடித்துள்ளனர்.

‘நாங்கள் சோதனையில் இறங்கிய போது அன்றிரவே சுமார் 25 கிலோ மத்திப்பிலான இறைச்சியை மீட்டிருந்தோம். ஆனால் அப்போது அங்கிருந்து குற்றவாளிகள் தப்பிவிட்டனர். இருப்பினும் அவர்களை வேட்டையாடிய காட்டு விலங்கின் இறைச்சியை மட்டும் மீட்டோம். 

முதலில் அதை மானின் இறைச்சி என்று தான் நினைத்தோம். கடந்த ஞாயிறு அன்று இந்த குற்ற செயலில் ஈடுபட்ட சுரேஷ் பாபுவை கைது செய்த பிறகு தான் அது காட்டெருமை என அறிந்தோம். அங்கிருந்த எலும்புகளை நாங்கள் சேகரித்ததில் அந்த காட்டெருமை சினையாகவும் இருந்துள்ளது என்பதை முதற்கட்ட விசாரணையில் அறிந்து கொண்டோம். 

உட்கூறாய்வில் அந்த சிறிய எலும்புகளை ஆராய்ந்ததில் அந்த எருமை சினையாக இருந்ததை உறுதி செய்துள்ளோம். இது தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுமார் ஆறு பேரை கைது செய்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார் அந்த மாவட்டடத்தின் வன அதிகாரி சுரேஷ்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் கர்ப்பமாக இருந்த யானை ஒன்றும், வெடிமருந்துடன் இருந்த பழத்தை தின்றதில் இறந்தது குறிப்பிடத்தக்கது.