கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், 100 கோடி ரூபாய்க்கும் மேல் பொதுமக்களிடம் மோசடி செய்ததாக பிரணவ் ஜூவல்லரியின் உரிமையாளர் மதன் மீது புகார் எழுந்தது.
நகைச்சீட்டுகள் மற்றும் பண முதலீடு செய்தவகையில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டதாக மொத்தம் 635 பேர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தனர். பிரணவ் ஜுவல்லரியின் உரிமையாளர் மதன் ஏற்கனவே மதுரை டான்பெட் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரை பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதனின் மனைவி கார்த்திகாவை, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை டிஎஸ்பி லில்லி கிரேஸ் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 சவரன் நகை, 52 ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளனர்.
நகைக்கடை உரிமையாளர் மதன் அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் ஆகிய 3 பேர் மீதும் மோசடி, ஏமாற்றுதல், கூட்டுச் சதி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சுமார் 14 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது கைதாகியுள்ள மதனின் மனைவி கார்த்திகாவிடமும் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.