குற்றம்

கோடநாடு பங்களாவில் தடையின்றி கொள்ளையடிக்க பூஜை? – பூசாரிகளிடம் விசாரணை

Veeramani

கோடநாடு பங்களாவில் எந்தவித தடையுமின்றி கொள்ளையடிப்பதற்காக கேரள பூசாரிகளை வைத்து முன்கூட்டியே கொள்ளையர்கள் பூஜை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8 மற்றும் 9 ஆவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த பூசாரிகளான சந்தோஷ் சாமி, மனோஜ் சாமியிடம் தனிப்படையினர், நேற்று பத்தரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இவர்கள் இருவருக்கும் இந்த வழக்கில் உள்ள தொடர்பு குறித்து ஏற்கனவே விசாரித்த காவல்துறையினர் பதிவு செய்திருந்த அறிக்கையின் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனகராஜ், சயான் ஆகியோர் கோடநாடு பங்களாவில் எந்தவித தடையும் இன்றி கொள்ளை சம்பவத்தை நடத்த பூசாரிகளான மனோஜ் சாமி, சந்தோஷ் சாமியை அணுகி பூஜைகள் செய்துள்ளனர். இவ்விருவரும் கேரளாவிலிருந்து ஒரு நாளுக்கு முன்னரே கோவை வந்து தங்கியிருந்து, அதன் பின்னர் உதகைக்கு சென்றதாகவும், கொள்ளை சம்பவத்திற்கு வாகனம் ஏற்பாடு செய்ததில் இவர்களுக்கு பங்கு உள்ளதாகவும் தெரிகிறது.

பங்களாவில் 8வது எண் கதவு வழியாக நுழைந்தபோது, அங்கிருந்த காவலாளி கிருஷ்ண தாபாவை கட்டிப்போட்டு, அவரை கண்காணித்த 4 பேரில் பூசாரிகளும் இருந்துள்ளதாக முந்தைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பூசாரிகளான சந்தோஷ்சாமி, மனோஜ்சாமியிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ள தனிப்படையினர், இருவரையும் இன்றும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சயான், சம்ஷீர் அலி ஆகியோரிடமும் நேற்று விசாரணை நடைபெற்றது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 மற்றும் 6 ஆவது நபர்களான சதீஷன், பிஜின் குட்டி ஆகியோரும் இன்று தனிப்படை விசாரணைக்கு ஆஜராகின்றனர்.