குற்றம்

ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற தென்மாவட்ட அரசியல் பி‌ரமுகர்‌ முயற்சி செய்தாரா?: புதிய தகவல்

ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற தென்மாவட்ட அரசியல் பி‌ரமுகர்‌ முயற்சி செய்தாரா?: புதிய தகவல்

webteam

சாத்தான்குளம் தந்தை-மகன் சித்ரவதை கொலை வழக்கில் தப்பியோடிய காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை, அரசியல் பிரமுகர் ஒருவர் காப்பாற்ற முயற்சி செய்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிபிசிஐடியின் கைது நடவடிக்கையை அறிந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், காவல்துறையிடம் பிடிபடாமல் இருக்க கடந்த 28ஆம் தேதி முதல் ஊர் ஊராக சுற்றியுள்ளார். அப்போது அவரை காப்பாற்ற தென்மாவட்ட அரசியல் பி‌ரமுகர்‌ முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்‌ளது. சிபிசிஐடி காவல்துறையினர் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை தேடியபோது, பல சோதனைச் சாவடிகளில் சம்மந்தப்பட்ட அரசியல் பிரமுகரின் பெயரை பயன்படுத்தி அவர் தப்பித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த அரசியல் பிரமுகரின் நண்பரும் ஸ்ரீதர் காரில் பாதுகாப்புக்கு சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2ம் தேதி அதிகாலையில் கயத்தாறு சோதனைச் சாவடியில் அவர்கள் வாகனம் தணிக்கைக்காக நிற்காமல் சென்றிருக்கிறது. உடனடியாக இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி மூலம் தெரிவிக்கப்பட்ட நிலையில் கங்கை கொண்டான் சோதனைச் சாவடியில் அவரின் வாகனம் சேசிங் செய்து மடக்கி பிடிக்கப்பட்டது. இதனிடையே தகவல் அறிந்து திருநெல்வேலி காவல் அதிகாரிகளும், சிபிசிஐடி அதிகாரிகளும் அங்கே வந்தனர். அவர்களிடமும் அரசியல் பிரமுகரின் பெயரை பயன்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதர். ஆனால் அதுபற்றி கண்டுகொள்ளாத சிபிசிஐடி அதிகாரிகள் அவரை அங்கிருந்து விசாரணைக்காக தூத்துக்குடிக்கு அழைத்து சென்று கைது செய்தனர்.

திருநெல்வேலி வழியாக கேரளா தப்பி செல்ல ஸ்ரீதர் திட்டமிட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீ‌தர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி, 4 பேரை விரட்டி பிடித்து கைது செய்தது.