நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள் மகன் கைதாகிய நிலையில் சீனியம்மாள் - உமா மகேஸ்வரி இடையேயான அரசியல் மோதல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை ரெட்டியார்பட்டியில் வசித்துவந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் தேதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் ஆவார். இந்நிலையில் சீனியம்மாள் - உமா மகேஸ்வரி இடையேயான அரசியல் மோதல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட திமுக பெண் நிர்வாகிகளில் சீனியம்மாளும், உமா மகேஸ்வரியும் முக்கியமானவர்களாக இருந்துள்ளனர். இதனையடுத்து1996ம் ஆண்டு நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் சீட் பெறுவதற்கு இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியுள்ளது. தனக்கு சீட் கிடைக்கும் என நம்பியிருந்த சீனியம்மாளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேயர் தேர்தலில் உமா மகேஸ்வரிக்கு சீட் தரப்பட்டது. அவரும் வெற்றி பெற்று திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பொறுப்பேற்றார். அதற்குப் பின் சீனியம்மாளுக்கும் உமா மகேஸ்வரிக்கும் இடையே பனிப்போர் நிலவ தொடங்கியது.
2011ம் ஆண்டு பேரவைத் தேர்தல் சங்கரன்கோவில் தொகுதிக்கும் உமா மகேஸ்வரிக்கே சீட் வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சீனியம்மாள் திமுகவில் இருந்து விலகி சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்துள்ளார். ஆனால் சில மாதங்களிலேயே திமுகவில் மீண்டும் இணைந்துள்ளார்.
இருவருக்கும் இடையேயான பிரச்னை அதிகரிக்க காரணமாக 2016 பேரவைத் தேர்தல் இருந்துள்ளது. தனது உறவினர் ஒருவருக்கு எம்.எல்.ஏ.சீட் வாங்கித்தரக் கோரி உமா மகேஸ்வரியிடம் சீனியம்மாள் தரப்பு ரூ.50 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் சீட்டும் வாங்கித்தரவில்லை என்றும், பணமும் திருப்பித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மோதல் போக்கு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. உமா மகேஸ்வரியின் அரசியல் வளர்ச்சி சீனியம்மாளை தலையெடுக்க விடாமல் செய்துவிட்டது என்ற பல வருட அரசியல் காழ்ப்புணர்ச்சி இந்தக் கொலைக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.