குற்றம்

கோவை: ஓட்டலுக்குள் புகுந்து அத்துமீறி தாக்கிய விவகாரம்: எஸ்.ஐ முத்து பணியிடை நீக்கம்

கோவை: ஓட்டலுக்குள் புகுந்து அத்துமீறி தாக்கிய விவகாரம்: எஸ்.ஐ முத்து பணியிடை நீக்கம்

Sinekadhara

கடந்த ஞாயிற்று கிழமை அன்று இரவு மணி 10.20 மணியளயில் கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் பகுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரவு 11 மணிக்கு கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு ஏற்ப ஓட்டலை மூட தயாராக ஒரு ஓட்டலின் ஷட்டர் பாதி அளவு மூடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் பெண்கள் உள்ளிட்டோர் ஓட்டலுக்குள் பசியாறிக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டலுக்குள் வந்த உதவி ஆய்வாளர் முத்து, வந்த வேகத்தில் அனைவரையும் லத்தியால் அடிக்கத் துவங்கினார். சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களையும் உணவக ஊழியர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கினார். இதில் ஒரு பெண்ணுக்கு தலையில் அடிபட்டது. ஒரு ஊழியர் உள்ளிட்ட மேலும் மூவர் காயமுற்றனர். எஸ்.ஐ. முத்துவின் அத்துமீறல்களும் லத்தி தாக்குதல்களும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பேருந்து நிலைய பகுதிகளில் இரவு 11 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் உணவகங்கள் இயங்க அரசு அனுமதித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே கடையை அடைக்கச் சொல்லி அப்பாவிகள் மீது ஆக்ரோஷம் காட்டியதற்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்தாண்டு இதேபோலத்தான் கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி கடையை அடைக்கவில்லை என கூறி சாத்தான்குளத்தில் தந்தையையும் மகனையும் விசாரணைக்கு அழைத்து சென்று சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்துடன் கோவை உணவக தடியடியையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்துள்ளன. காவல் பணிக்காக களத்தில் இருக்கும் காவல் உதவி ஆய்வாளரின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

தடியடி குறித்து, உணவக உரிமையாளர் மோகன்ராஜ் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதையடுத்து உதவி ஆய்வாளர் முத்து, முதலில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் பின்னர் ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டார். உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார். நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, எஸ்ஐ முத்து தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே கோவை காவல் ஆணையருக்கு விளக்கம் கேட்டு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.