குற்றம்

’2021ம் ஆண்டில் சென்னையில் அதிககொலைகள்’ - அதிர்ச்சியளிக்கும் காவல்துறை புள்ளிவிவரம்

’2021ம் ஆண்டில் சென்னையில் அதிககொலைகள்’ - அதிர்ச்சியளிக்கும் காவல்துறை புள்ளிவிவரம்

Sinekadhara

2020ஆம் ஆண்டைவிட 2021ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை அதிகம். நகை, பணத்திற்காக 10 கொலை சம்பவங்கள் நடந்துள்ளதாக சென்னை காவல்துறை புள்ளி விவரம் சொல்கிறது.

சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக அடிக்கடி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இருந்தாலும் 2020ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 14 கொலைகள் அதிகமாக நடந்துள்ளதாக சென்னை காவல்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு 147 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு (2021) 14 கொலைகள் அதிகமாகி 161 கொலை நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. அதில் 10 கொலைகள் பணம் மற்றும் நகைக்காக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்தாண்டு 38 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 357 கொள்ளை வழக்குகள் நடந்துள்ளதாகவும் சென்னை காவல்துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடந்தாண்டு செல்போன் மற்றும் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக 907 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு 938 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் கடந்தாண்டு 31 வழக்குகள் குறைந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு மட்டும் 435 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சென்னையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு தனிப்படை அமைப்பட்டது. அதனடிப்படையில் சென்னையில் கடந்த ஆண்டு மட்டும் 3,104 குட்கா வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டு, 48,206 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மேலும், 665 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,058 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக 27 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளதாக சென்னை காவல்துறையின் புள்ளி விவரம் சொல்கிறது.

- சுப்பிரமணியன்