ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1கோடியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக-ஆந்திர எல்லையில் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து தமிழக பதிவு எண் கொண்ட ஃபார்சுனர் கார் ஒன்று வந்தது. அதை வழிமறித்து போலீசார் இபாஸ் இருக்கிறதா எனக் கேட்டனர். அதற்கு அவர்கள் இல்லை என பதிலளித்துள்ளனர். இதையடுத்து அந்த காரை திருப்பி அனுப்ப போலீசார் முடிவு செய்தனர்.
இதையடுத்து டிரைவரின் அருகே ஒரு கருப்பு கலர் பெரிய பேக் ஒன்று இருந்துள்ளது. அதை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த பேக்கில் 500 ரூபாய் கட்டுக்கள் அடுக்கடுக்காக இருந்தது. இதைத்தொடர்ந்து காரை சோதனை செய்ததில் 3 பேக்குகளில் ஒரு கோடி ரூபாய் நோட்டு கட்டுக்கள் சிக்கின. இந்த ரூபாய் நோட்டுகள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் அப்பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்கள் வந்த காரில் ஆந்திர எம்.எல்.ஏ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணம் எங்கிருந்து எங்கு கொண்டு சென்றனர் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. போலீசார் வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.