குற்றம்

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் மோசடி - வடமாநில நபருக்கு வலைவீச்சு

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் மோசடி - வடமாநில நபருக்கு வலைவீச்சு

Sinekadhara

கோவையில் நகை வடிவமைத்துத் தருவதாக 2 பேரிடம் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வாங்கி மாயமான வடமாநில நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை பேரூர் மெயின் ரோடு செட்டி தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ் (53). தங்க நகை வியாபாரியான இவர் கோவை பெரியகடைவீதி போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கோவை செட்டி தெருவில் வசித்துவந்த கொல்கத்தாவைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர் சுஜித் மைட்டி(40) என்பவரிடம் கொடுத்து, அதனை நகை ஆபரணங்களாக மாற்றி பெற்று விற்பனை செய்து வருகிறேன்.

இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி நான் அவரிடம் 420 கிராம் தங்க நகைகளை கொடுத்து ஆபரணங்களாக மாற்றி தருமாறு கொடுத்தேன். இதேபோல், எனது நண்பரும் அவரிடம் 578 கிராம் தங்கத்தை கொடுத்தார். ஆனால் சுஜித் மைட்டி எங்களிடம் வாங்கிய நகைகளை ஆபரணங்களாக மாற்றி தராமல் இருந்தார். இதனையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் குறித்து விசாரித்தபோது அவர் தங்கத்துடன் மாயமானது தெரியவந்தது. எனவே அவரை கண்டுபிடித்து எங்களது நகைகளை மீட்டு தரவேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார்.

இதேபோல், செல்வபுரம் இந்திராபுரம் அமல்நகரை சேர்ந்த நகை வியாபாரி சந்தோஷ்(34) என்பவர் செல்வபுரம் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது, நான் கோவை செட்டி தெருவில் வசித்த சுஜித் மைட்டி என்பவரிடம் கடந்த 6 மாதங்களாக தொழில் ரீதியான பழக்கம் வைத்திருந்தேன். இந்நிலையில், கடந்த மாதம் 7ஆம் தேதி நான் 759.8 கிராம் தங்க நகைகளை ஆபரணங்களாக வடிவமைத்து தருவதற்காக சுஜித் மைட்டியிடம் கொடுத்தேன். ஆனால் அவர் திருப்பி கொடுக்காமல் செட்டி தெருவில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். எனவே அவரிடம் இருந்து நகைகளை மீட்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

சுஜித் மைட்டி கோவையில் மொத்தம் 2 பேரிடம் சுமார் ரூ.90 லட்சம் மதிப்பிலான 1.8 கிலோ தங்கத்தை பெற்று மோசடி செய்துள்ளார். எனவே அவர்மீது போலீசார் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.