தவறவிடும் வைஃபை டெபிட் கார்டுகளை பயன்படுத்தி நூதன திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொள்ளையன், சைபர் கிரைம் காவலர்களிடம் சிக்கியது எப்படி?
வைஃபை வசதி கொண்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரகசிய குறியீட்டு எண் தேவைப்படாது. இதுபோன்ற வசதி கொண்ட டெபிட் கார்டை சென்னை சின்மயா நகரைச் சேர்ந்த மனோகரன் என்பவர் கடந்த 28-ஆம்தேதி தவற விட்டார். அடுத்தநாளே, அவரது வங்கிக் கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதேபோல, அரும்பாக்கத்தில் பிரபு என்பவரின் தொலைந்து போன வைஃபை கார்டு மூலம் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது.
இவ்விருவரின் பணமும், கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அந்த பெட்ரோல் பங்கில் விசாரித்தபோது, ஒரு நபர் அடிக்கடி வந்து தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி வைஃபை கார்டு மூலம் பலமுறை ஐந்தாயிரம் ரூபாயை எடுத்துள்ளதாக பெட்ரோல் பங்க் ஊழியர் தெரிவித்தார். சந்தேகமாக இருந்ததால் அந்த நபரை பெட்ரோல் பங்க் ஊழியர் புகைப்படம் எடுத்து வைத்திருந்தார். இந்த புகைப்படத்தையும், சிசிடிவி காட்சிகளையும் கொண்டு மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.
மணிகண்டன் புரசைவாக்கம் துர்கா மேன்சனில் தங்கி சவுகார்பேட்டையில் உள்ள ஜுவல்லரி கடைகளுக்கு புரோக்கராக பணிபுரிந்து வந்துள்ளார். ஏடிஎம் மையங்களில் தவறவிடும் வைஃபை கார்டுகளை திருடி இதுபோல அவர் பணம் திருடிவந்தது தெரியவந்தது.
சேலத்தில் தங்க, வெள்ளி நகைகளை செய்பவராக இருந்த மணிகண்டன், கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவித்தநிலையில், சென்னைக்கு நகை புரோக்கராக பணி செய்து வந்துள்ளார். ஒருமுறை இதுபோன்று தவறவிட்ட வைஃபை ஏடிஎம்மை எடுத்துவந்து பெட்ரோல் போட்டபோது யாருக்கும் தெரியாததால் வைஃபை கார்டுகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டதாக மணிகண்டன் கூறியுள்ளார். அவரிடம் இருந்து 6 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.