நாகையில் திருடுபோன இருசக்கர வாகனத்தை, ஜிபிஎஸ் கருவி கொண்டு கண்டுபிடிக்க முயன்றுள்ளனர் காவல்துறையினர். அப்படி சென்றபோது, அவ்வாகனத்துடன் சேர்த்து ஆடு, கோழி, பட்டாக்கத்திகள் போன்ற பல திருட்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவையாவும் தண்ணீர் கேன் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதைத்தொடர்ந்து இத்திருட்டுகளில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினத்தில் வெளிப்பாளையம், பெருமாள்கோவில்வீதி, கூடமுடையோர் காலனி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சமீபகாலமாக தொடர்ந்து களவு போய் வந்தது. இருசக்கர வாகனங்கள் மட்டுமன்றி, ஆடு கோழி போன்றவையும் திருடு போனது. இதுகுறித்து பொதுமக்கள் வெளிப்பாளையம் மற்றும் நாகை நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துவந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நாகை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் முனிசேகர், தனது இரு சக்கர வாகனத்தை காடம்பாடி வீட்டில் நிறுத்திவிட்டு சென்னை சென்றுள்ளார். பின்னர் இன்று காலை வந்து தனது வாகனத்தை வீட்டில் பார்த்தபோது அந்த வாகனம் திருடு போனதை கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அவரது செல்போனில் இருந்த ஜிபிஎஸ் கருவியை இயக்கி பார்த்தபோது, அந்த வாகனம் நாகை நாடார் தெருவில் உள்ள ஒரு தண்ணீர் கேன் குடோனில் பதுக்கி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், அந்த குடோனின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கே 4 இருசக்கர வாகனங்கள், 3 பட்டாக்கத்தி, ஆடு, கோழி உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டது அம்பலமானது. இதையடுத்து வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், குடோனில் பதுங்கி இருந்த செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த தர்மா மற்றும் அவரது கூட்டாளியொருவர் என இருவரை கைது செய்தனர். இவர்கள் மட்டுமன்றி வாகன திருட்டில் இன்னும் பல நபர்கள் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட முழு கும்பலையும் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக முயற்சி செய்துவருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
தொடர்புடைய செய்தி: ரயிலில் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து திருட்டு: வடமாநில நபர் கைது