குற்றம்

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை: மருத்துவமனை ஊழியர்களிடம் தொடர் விசாரணை

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை: மருத்துவமனை ஊழியர்களிடம் தொடர் விசாரணை

நிவேதா ஜெகராஜா

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக பெருந்துறை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்களிடம் 5 மணி நேரம் காவல்துறை விசாரணை செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் மருத்துவமனை பதிவேடுகள், ஆவணங்களை பறிமுதல் செய்தனர் காவல்துறையினர்.

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டையை விற்க வழக்கில் சிறுமியின் தாய் இந்திராணி, அவரது 2-வது கணவர் சையத் அலி மற்றும் இடைத்தரகர் மாலதி ஆகியோரை கைது செய்யப்பட்டு ஈரோடு நீதிமன்றதத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் சிறுமியின் வயதை ஆதாரில் அதிகமாக காண்பித்து போலி ஆதார் தயாரித்த வழக்கில் ஓட்டுநர் ஜான் கைது செய்யப்பட்டார். மேலும் ஈரோடு தெற்கு போலீசார் மேற்கொண்ட அடுத்தகட்ட விசராணையில் சிறுமியின் கருமுட்டை பெறப்பட்டதாக கூறப்படும் ஈரோடு மற்றும் பெருந்துறை தனியார் மருத்துவனைக்கு சம்மன் அனுப்பி போலீசார் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து பெருந்துறை தனியார் மருத்துவனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் நேற்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி கனகேஷ்வரி, ஆய்வாளர் விஜயா ஆகியோர் முன்பு நேரில் ஆஜராகினர். சுமார் 5 மணி நேரம் நடத்திய விசாரணைக்கு பின் மருத்துவனை பதிவேடுகள், சிகிச்சை அளிக்கப்பட்ட பெயர் பட்டியல் குறித்த ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின் செய்தியாளர்கள் இருப்பதை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள், பின் வாசல் வழியாக காரில் ஏறிச் சென்றனர்.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்வதற்காக 6 பேர் கொண்டகுழு அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவனைகளில் விசாரணை நடத்த உள்ளனர். சென்னையில் இருந்து சுகாதாரத்துறை உயர்மட்ட குழுவைச் சேர்ந்த டாக்டர் விஸ்வநாதன், கமலக்கண்ணன்,ஈரோடு சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கோமதி, மகப்பேறு மருத்துவர் மலர்விழி டாக்டர் கதிரவன் ஆகியோர் மருத்துவனைக்குசென்று விசாரணை செய்ய உள்ளனர்.