சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 5 ஆம் தேதி தியாகராஜன் அவரது தோழி நாக நந்தினி உட்பட நான்கு பேர் அறை எடுத்து தங்கியுள்ளனர். நாளிதழ் ஒன்றில் பணியாற்றும் அய்யப்பன் என்பவரும் அதே விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். நாக நந்தினி பார்ப்பதற்கு தெரிந்தவர் போல் இருந்ததால் அவரை பார்த்து அய்யப்பன் கையசைத்துள்ளார். இதனைக்கண்ட தியாகராஜன் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தனது அறையில் வைத்திருத்த கத்தியை எடுத்து வந்து என் தோழியை பார்த்து 'கை அசைப்பாயா?' என கூறிக்கொண்டே அய்யப்பன் கையில் வெட்டியுள்ளார். கையில் வெட்டுண்ட அய்யப்பன் குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மனோகர் விசாரணை மேற்கொண்டார்.
காவல் ஆய்வாளரின் விசாரணையில் தான் ஒரு வழக்கறிஞர் என தியாகராஜன் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை காவல்நிலையம் வரச்சொல்லிவிட்டு அய்யப்பனை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.காலை பணிக்கு வந்த குரோம்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சிவகுமார் இந்த வழக்கை விசாரித்துள்ளார். வழக்கறிஞர் என்று கூறிய தியாகராஜனிடம் பணம் பெற்று கொண்டு சாதாரண பிரிவில் வழக்கு பதிவு செய்து அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர்தான் பணம் பெற்று அனுப்பி வைத்த தியாகராஜன் மோசடி நபர் என்பதும் அவர் வழக்கறிஞர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இவர் மீது காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. மதுரவாயல் காவல் நிலையத்தில் போலீஸ் என கூறி பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி தியாகராஜன். பணத்திற்காக முக்கிய குற்றவாளியை தப்பவிட்ட சம்பவம் தற்போது காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த சம்பவம் நடைபெற்ற லாட்ஜில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் தியாகராஜன் மிகப்பெரிய பட்டா கத்தியை கொண்டு சென்று அய்யப்பனை மிரட்டி தாக்கும் காட்சியும் போலீசார் விசாரித்து விட்டு செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.சிசிடிவி காட்சி வெளியானதால் ஆய்வாளர் பணம் பெற்றுக் கொண்டு மறைத்த காரியம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. போலீசார் லஞ்சம் பெறுகிறார்கள் என்ற கூற்று தற்போது உண்மையாகியுள்ளதாக அனைவராலும் பேசப்படுகிறது.
தற்போது பணத்திற்காக விடப்பட்ட போலி வழக்கறிஞர் தியாகராஜன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடும் தீவிர முயற்சியில் குரோம்பேட்டை ஆய்வாளர் சிவகுமார் இறங்கியுள்ளார்.
- ச.சாந்த குமார்
(செய்தியாளர்)