கடந்த சில வாரங்களாக மும்பையில் போதைப் பொருட்கள் கடத்தும் கும்பலை பிடிக்கும் வேட்டையில் ஈடுப்பட்டிருக்கின்றனர் மும்பை போலீஸார். தற்போது 10க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் பிடிப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில், ரூ.11 லட்சம் மதிப்பிலான 109 கிராம் கொக்கேன் என்ற போதைப்பொருளை வைத்திருந்த 24 வயது பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். மஞ்சுஷா சிங் என்ற அந்தப் பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மும்பைக்கு வந்துள்ளார். சிவாஜி நகரில் கோவந்தி என்ற பகுதியில் தங்கு அங்குள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலைசெய்து வந்துள்ளார்.
அவருக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் போதைப்பொருள் கடத்தும் நபர் ஒருவரின் தொடர்பு கிடைத்திருக்கிறது. அந்த நபரின் வழிகாட்டுதலின் படி இந்த தொழிலில் இறங்கியிருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை மும்பை யூனிட் 7 பகுதியின் காவல் ஆய்வாளர் மனிஷா ஸ்ரீதங்கருக்கு இதுகுறித்து தகவல் கிடைத்திருக்கிறது. அந்த பெண்ணை கைதுசெய்து விசாரித்ததில், அவரிடமிருந்து 11 லட்சம் மதிப்பிலான கொக்கேன் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவருக்கு இந்த போதைப் பொருட்கள் பற்றி எதுவும் தெரியாது எனவும், ஒருமுறை குறிப்பிட்ட நபரிடம் சேர்த்துவிட்டால், தனக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் எனவும் போலீஸாரிடம் கூறியிருக்கிறார். மேலும் இந்தத் தொழில் கடந்த மூன்று அல்லது 4 மாதங்களாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அவரை வழிநடத்திய போதைப்பொருள் கடத்தல்காரரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.