பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னிற்கு விதிகளை மீறி வாகனத்தில் பயணித்த தேனியைச் சேர்ந்த 18 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குரு பூஜை இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில் தென் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பசும்பொன்னிற்கு செல்ல விதிக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில் தேனியிலிருந்து உசிலம்பட்டி வழியாக பசும்பொன்னிற்கு செல்வதற்காக டெம்போ வேனின் மேல் பகுதியில் நின்றவாறு வாகனத்தில் சிலர் சென்றனர். அப்போது உசிலம்பட்டியில் தேவர் சிலை முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இடைமறித்து, வேனின் மேல் தளத்தில் பயணிக்கக்கூடாது என தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கீழே இறங்க முடியாது எனவும், போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில் தேனியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, அருண்குமார், அஜித்குமார், பிரேம், ராஜேஸ் உள்ளிட்ட 18 பேரை கைது செய்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் அவர்கள் மீது விதிகளை மீறி வாகனத்தில் வந்தது, போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.