குற்றம்

நயன்தாராவை வைத்து திருடனை பிடித்த காவல் அதிகாரி!

webteam

பீகாரில் பெண் போலீசார் ஒருவர் நயன்தாராவின் புகைப்படத்தை பயன்படுத்தி, மொபைல் திருடனை பிடித்த சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பாட்னாவில் இருந்து சுமார் 150 கீமி தொலைவில் உள்ளது தர்பங்கா மாவட்டம். இங்குள்ள பாஜக பிரமுகர் சஞ்சய் குமார் மகடே என்பவரின் மொபைல் ஒன்று திருடு போனது. இது குறித்து சஞ்சய் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை விசாரித்த மதுபாலா என்ற காவல் அதிகாரி மொபைல் திருடனை கையும் களவுமாகப் பிடிக்க முடிவு செய்தார்.

இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய அவர், காணாமல் போன மொபைல் போன், முகமது ஹஸ்னெயின் என்பவரிடம் இருப்பதை கண்டுப்பிடித்துள்ளார். மொபைல் திருடனை பிடிக்க தெளிவாக திட்டம் தீட்டிய காவல் அதிகாரி மதுபாலா, முகமது பயன்படுத்தி வந்த நம்பருக்கு அடிக்கடி கால் செய்து பேசியுள்ளார். சில நாட்கள் கழித்து முகமதை காதலிப்பதாகவும் அவரை நேரில் சந்திக்க விரும்புவதாக மதுபாலா போனில் கூறியுள்ளார். இதை முதலில் நம்பாத முகமது, அவரின் புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டுள்ளார். மதுபாலாவும் உடனடியாக கோலிவுட் நடிகை நயன்தாராவின் ஃபோட்டோவை அனுப்பி உள்ளார். நயன்தாராவின் படத்தை உண்மை என நம்பிய முகமது முழு மனதுடன் மதுபாலாவை நேரில் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்பு, அவரை சந்திக்க நகரத்திற்கு வந்த முகமதுவை, பர்தா உடை அணிந்துக் கொண்டு சந்தித்த மதுபாலா இரண்டு, காவல் அதிகாரிகளின் உதவியுடன் சென்று வெற்றிகரமாக கைது செய்துள்ளார். அசாத்தியமான திட்டத்தால் மொபைல் திருடனைப் பிடித்த காவல் அதிகாரி மதுபாலாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.