புழல் சிறை புதியதலைமுறை
குற்றம்

நண்பனை பார்க்க புழல் சிறைக்குச் சென்ற இளைஞர்.. கஞ்சா பொட்டலத்தை தூக்கி வீசியதால் சிறையில் அடைப்பு

புழல் மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதாகி அடைக்கப்பட்ட நண்பனை சந்திக்க சென்றவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம்.. என்ன நடந்தது?

யுவபுருஷ்

சென்னையை சேர்ந்த மெஹபூல்பாஷா என்பவர் பெரும்பாக்கம் போலீசாரால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மெஹபூல்பாஷாவை பார்ப்பதற்காக காட்டுப்பாக்கத்தை சேர்ந்த அவரது நண்பர் அருண்குமார்(21) என்பவர், புழல் சிறைக்கு சென்றுள்ளார். அப்போது, பார்வையாளர் அறை வழியே கருப்பு நிற டேப்பால் சுற்றப்பட்ட பொட்டலத்தை தூக்கி நண்பனை நோக்கி வீசியுள்ளார். இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறை காவலர்கள், அதனை தடுக்க முற்பட்ட போது அருண்குமார் சிறைக் காவலர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த பொட்டலத்தை கைப்பற்றி ஆய்வு செய்ததில், தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த சிறை காவலர்கள், அருண்குமாரை கைது செய்து புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, புழல் விசாரணை சிறை அலுவலர் சரண்யா அளித்த புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருள் கடத்தல் என பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்டவை அடிக்கடி பறிமுதல் செய்யப்படுவது குறித்து சிறைக் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே புழல் சிறையில் நண்பனை சந்திக்க சென்று, கஞ்சாவை தூக்கி வீசியதால் புழல் சிறையிலேயே அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.