Cyber crime PT Web
குற்றம்

எச்சரிக்கை: அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோகால்கள்.. எச்சரிக்கும் காவல்துறை

முகம் தெரியாத நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை எடுத்து பேசும்போது, அந்த நபருக்கே தெரியாமல் அதனை வீடியோ பதிவு செய்து பிறகு நிர்வாணமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள்.

Angeshwar G

உலகம் உள்ளங்கையில் சுருங்கிவிட்ட சூழலில் நாமும் பலரது கைகளில் அகப்பட்டுக் கொண்டுள்ளோம் என்பது யாராலும் மறுக்க முடியாதது. தவறாக நாம் க்ளிக் செய்யும் ஓர் இணைப்பில் நமது தகவல்களை நமக்கே தெரியாமல் எடுத்துக்கொண்டு அதை வைத்து பணம் சம்பாதிக்கும் நிகழ்வுகளும் நடக்கவே செய்கின்றன.

ஆன்லைன் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக செய்யப்படும் மோசடி, OTPக்கள் மூலம் செய்யப்படும் மோசடி, பெண்குரல் அல்லது பெண்களை மையப்படுத்தி செய்யப்படும் மோசடிகள், டேட்டிங் செயலிகள் மூலம் என பல்வேறு வகைகளில் மோசடிகள் செய்யப்படுகின்றன. இதில் பெண்கள் குரல் அல்லது பெண்களை மையப்படுத்தி செய்யப்படும் மோசடிகளில் ஆண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

சமீபத்தில் இம்மாதிரியான வழக்குகள், இச்சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் வழங்கும் புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து குற்றவாளிகளைக் கண்டறிய சிறப்புக் குழுக்களை சைபர் க்ரைம் காவல்துறை அமைத்துள்ளது. கடந்த சில மாதங்களில் 30-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாகவும் இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வரும் வீடியோகாலை எடுக்கும்போது, அவர்கள் நாம் பேசும் வீடியோ காலை பதிவு செய்துகொண்டு பிறகு அதனை நிர்வாணமாக சித்தரித்து பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர். சைபர் க்ரைம் மோசடிகளில் இது ஒருவகை.

இந்த மாதிரியான புகார்கள் சமீபத்தில் சென்னை சைபர் க்ரைம் போலீசாருக்கு அதிகம் வருகின்றன. இதுமாதியான மோசடிகள் தொடர்பாக 12 புகார்கள் சமீபத்தில் வந்துள்ளதாக சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புகார்கள் தொடர்பாக விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

முகம் தெரியாமல் வரும் வீடியோ கால் அழைப்புகளை தவிர்க்க வேண்டும் எனவும், அவற்றை கவனமாக கையாள வேண்டும் என்றும் சைபர் க்ரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆசை வார்த்தை கூறி முதலில் பேசி பிறகு தவறாக முகத்தை சித்தரித்து பணம் கேட்டு மிரட்டும் செயல் அதிகரித்து வருவகிறது. எனவே பொதுமக்கள் கவனத்தோடு இருக்க வேண்டும் எனவும் சென்னை சைபர் க்ரைம் காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளனர்.