குற்றம்

3 பாதுகாப்புப்படை காவலர்களை சுட்டுக்கொன்ற சக காவலர் விடுதலை! ஏன்?

3 பாதுகாப்புப்படை காவலர்களை சுட்டுக்கொன்ற சக காவலர் விடுதலை! ஏன்?

webteam

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மூன்று சக காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளை மனநலம் பாதித்தவர் என்ற அடிப்படையில் விடுதலை செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை சொந்த ஊரான உத்தரபிரதேசத்துக்கு மாற்றி, பரேலியில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் விஜய் பிரதாப் சிங் என்பவர், கடந்த 2014 ம் ஆண்டு அக்டோபர் 8 ம் தேதி, சக காவலர்களான மோகன்சிங், சுப்புராஜ், கணேசன் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரதாப் சிங் மற்றும் கோவர்த்தன் சிங் ஆகியோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் விஜய் பிரதாப் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து 2018 ஏப்ரல் 9 ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் பிரதாப் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது விஜய் பிரதாப் சிங், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தது தெரியவந்தது. அத்துடன், சிறையில் அடைக்கப்பட்ட பின், அவர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அரசுத்தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விஜய்பிரதாப் சிங் மனநலம் பாதித்தவர் என்பது நிரூபணமாகியுள்ளதாக கூறி, அவருக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் விதிவிலக்கு வழங்கி, அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். மேலும் அவரை சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்பி, அந்த மாநிலத்தின் பரேலி நகரில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், பலியான காவலர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுடன் கூடுதலாக 3 லட்சம் ரூபாயும், காயமடைந்த இருவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

- முகேஷ்