குற்றம்

பெரம்பலூர்: ஆள்கடத்தலில் ஈடுபட்ட நபர் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி பின்னணி

பெரம்பலூர்: ஆள்கடத்தலில் ஈடுபட்ட நபர் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி பின்னணி

webteam

பெரம்பலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 23 நபர்களிடம் 1 கோடியே 83 லட்சம் ரூபாயை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் சிங்கிளாந்தபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (40) என்பவரை கடத்திச் சென்றுவிட்டதாக அவரது உறவினர் ஒருவர் காவல் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து பெரம்பலூர் போலீசார் ரோஸ் நகரைச் சேர்ந்த மோகன்பாபு (25)என்பவரது வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது கடந்த 29 ஆம் தேதி பிரகாஷை சென்னை கோயம்பேட்டில் இருந்து காரில் கடத்தி வந்து வீட்டில் அடைத்து வைத்ததாகவும் தங்களிடம் மோசடி செய்த பணத்தை கொடுத்துவிட்டு செல்லுமாறும் கூறியதாகவும் மோகன்பாபு தெரிவித்துள்ளார். இதையடுத்து மோகன் பாபு மற்றும் பிரகாஷை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரித்தனர்.

அதில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெருமளவில் மோசடி செய்தது தெரியவந்தது. பிரிண்டிங் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ பயின்றுள்ள பிரகாஷ் , தான் ஹோம் அண்ட் ரூரல் டெவலப்பெண்ட் ஜாய்ன் செகரட்டரி என அறிமுகமாகி, மோகன் பாபுக்கு ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் பெற்றுள்ளார். அதேபோல் மோகபாபுவின் மனைவிக்கு விஏஓ வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் பெற்றுள்ளார்.

இதே போல் மொத்தம் 23 நபர்களிடம் ஒரு கோடியே 83 லட்சம் ரூபாயை பெற்று பிரகாஷ் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பிரகாஷ் மேல் சிவகங்கை, துறையூர், ஜீயபுரம், ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரகாஷ் மீது மோசடி வழக்கும், மோகன்பாபு மீது ஆட்கடத்தல் வழக்கும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1 கோடியே 83 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.