செய்தியாளர்: அச்சுத ராஜகோபால்
பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூர் அருகே ஊட்டத்தூர் செல்லும் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது வீட்டின் அருகே சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த சுரேஷ் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக தனது வீட்டில் மது விற்பனை செய்து வந்துள்ளார். அவரிடம் மதுவாங்க வருவோர் நள்ளிரவு வேளையில் ஆனந்தகுமார் வீட்டின் கதவை தட்டி மதுபானங்களை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
இதனை கண்டித்த ஆனந்தகுமார், சுரேஷிடம் நேரடியாக முறையிட்டுள்ளார். “பெண் பிள்ளைகள் இருக்கும் என் வீட்டில் இப்படி நள்ளிரவில் வருவோர் மதுபானம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். உனது வீட்டின் முன்பாக மதுவிற்பனை பதாகை வைத்து விற்பனை செய்” எனக் கூறி சென்றுள்ளார். இருப்பினும் சுரேஷ் மது விற்பனையை தீவிரமாக செய்து வந்த நிலையில் நாளுக்குநாள் மது வாங்க வருவோர், தவறுதலாக ஆனந்தகுமார் வீட்டின் கதவை தட்டி மதுபானங்களை கேட்டுள்ளனர்.
இதையடுத்து ஆனந்தகுமார் பாடாலூர் காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ஆனந்தகுமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார். இதை தெரிந்து கொண்ட சுரேஷ், ஆனந்தகுமாரை கொலை செய்ய திட்டமிட்டு, தனது குடும்பத்தினருடன் (மனைவி, 2 குழந்தைகள் உதவியுடன்) சேர்ந்து கடப்பரை மற்றும் கம்பி மற்றும் கற்களைக் கொண்டு ஆனந்தகுமாரை தாக்கியுள்ளார். இதில் அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து தப்ப முயன்ற சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கைதுசெய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், மருத்துவப் பரிசோதனையில் சுரேஷிக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததால் அவர் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பில் உள்ளார். அவரது மனைவி கீதாவை திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கவும், சிறுவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள சிறார் சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.