இப்போதெல்லாம் பல ஆன்லைன் நிறுவனங்களில், ‘இங்கு முதலீடு செய்தால் பலமடங்கு லாபம்’ என்ற விளம்பரங்கள் அதிகளவில் வலம் வர தொடங்கியுள்ளன. ஆன்லைன் நிறுவனங்களை நம்பி ஏமாறும் மக்களும் அதிகரித்து வருகின்றனர். இதில் ஏமாறும் பலரும் படித்தவர்கள் என்பது இன்னும் வருத்தத்திற்குறிய ஒன்று.
இதை இப்போது அழுத்திச் சொல்ல, முக்கியமான ஒரு காரணம் உள்ளது. அது, foxconn-india.com. இந்த நிறுவனம் foxconn நிறுவனத்தின் பெயரில் இயங்கிய போலி நிறுவனம் என்றே தற்போது வரை அறியப்படுகிறது. ஆன்லைன் செயலியான இதில் walletல் முதலில் 500 ரூபாய் செலுத்தினால் அதற்கான லாபமாக தினமும் 12.50 ரூபாய் வரும். நீங்கள் செலுத்தும் பணத்திற்கேற்ப லாபம். அவ்வப்போது அறிவிக்கப்படும் ஆஃபர்களும் இதில் அடக்கம்.
இந்த செயலியில் இதுவரை 1,500க்கும் மேற்பட்டோர் ஏமாந்துள்ளனர். ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கிலும், ஒரு சிலர் லட்சக்கணக்கிலும் இன்னும் சிலர் கோடிக்கணக்கிலும் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.
இது குறித்தான தகவல் தெரிந்ததும் நாம் முதலில் தொடர்பு கொண்ட நபர் விஜயகுமார். இவர் பணத்தை இழந்தவர். நம்மிடையே பேசிய அவர், “foxconn-india.com என்ற ஒரு செயலியை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். இதில் முதல்கட்டமாக 500 ரூபாய் செலுத்தினால் ரூ.12.5 ஒவ்வொரு நாளும் கிடைக்கும் என சொல்லி இருந்தார்கள். செயலியில் ஒரு wallet இருக்கும். அதில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதைக் கொண்டு foxconn பொருளின் ஏதேனும் ஒன்றில் நாம் முதலீடு செய்தால் அதற்கு foxconn நிறுவனம் வட்டிபோல் பணம் தருவார்கள். 5%, 3%, 2% என ஒவ்வொரு நாளும் வட்டி விகிதம் மாறிக்கொண்டே இருக்கும்.
முதற்கட்டமாக நான் 500 ரூபாய் செலுத்தினேன். 12.5 ரூபாய் நாள்தோறும் கிடைத்துக் கொண்டே இருந்தது. ஒரு நாள் இதில் ஆஃபர் என்று சொல்லி அறிவித்தார்கள். 9,000 ரூபாய் செலுத்தினால் 1,080 ரூபாய் வட்டியாக கிடைக்கும். மூன்று நாள் மட்டும் இந்த ஆஃபர் என்றார்கள். அதற்குறிய பணம் walletல் ஏறிக்கொண்டுதான் இருந்தது. இதன்பின் 18,000 ரூபாய் பணம் செலுத்தினேன். வேறு ஒரு கணக்கு மூலம் 10,000 ரூபாய் செலுத்தினேன். 10,000 ரூபாய் நீங்கள் செலுத்தினால் 60 நாளில் 48,000 ரூபாய் திரும்ப கிடைக்கும் என சொன்னார்கள்.
திடீரென 10/10/2023 அன்று Site ஓபன் ஆகவில்லை. தொடர்ந்து அதன் அதிகாரி ஒருவரிடம் இது குறித்து வாட்சாப்பில் கேட்டேன். ஆனால் ஒரு டிக் மட்டும்தான் காட்டியது. சிறிது நேரத்திற்கு பின் பார்த்தபோது எங்களுக்கான வாட்சாப் குரூப்பையே காணவில்லை. அதில் 1500க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தனியாக ஒரு வாட்சாப் குரூப் தொடங்கி புகார்களை தெரிவித்தனர். பெங்களூருவில் இருந்து ஒரு நண்பர் என்னை தொடர்பு கொண்டார். அவர் ரூ. 4.5 லட்சம் கடன் வாங்கி இதில் முதலீடு செய்துள்ளார். இப்படி இன்னும் பலர் இதில் முதலீடு செய்துள்ளனர். பணம் கொடுத்து ஏமார்ந்தவர்கள் அனைவரும் படித்தவர்கள்தான்.
அந்த செயலியில் பிரதமர் மோடியின் புகைப்படமும் foxconnன் சேர்மேனும் இருப்பது போன்ற புகைப்படங்களும் இருந்தன. அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதுவரை 2 தடவை foxconn குறித்து தொலைக்காட்சிகளில் பேசி இருந்தார். இதையெல்லாம் வைத்து, இது அந்த foxconnதான் என நினைத்து ஏமார்ந்துவிட்டோம்” என்றார்.
அந்த செயலியில் பணம் செலுத்தி இருந்த மேலும் சிலரை தொடர்பு கொண்டோம். அவர்களில் நவீன் குமார் நம்மிடம் பேசுகையில், “நான் பெங்களூரிவில் வேலை செய்கிறேன். டெலகிராம் மூலம் என்னை தொடர்பு கொண்டார்கள். Online Job என்றுதான் முதலில் சொன்னார்கள். முதலில் 500 ரூபாய் தானே என முதலீடு செய்தேன். பணம் சரியாக வரவும் செய்துகொண்டே இருந்தேன். அப்படி இதுவரை 17,000 ரூபாய் வரை முதலீடு செய்துள்ளேன்” என்றார்.
இமிதஷ் பாஷா என்பவர், “இன்ஸ்டாகிராம் மூலம் தான் எனக்கு இந்த செயலி அறிமுகம். நான் என்னுடைய உறவினர்கள் என இதுவரை கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தோம். காவல்துறையில் இதுவரை ஏதும் புகார் அளிக்கவில்லை” என்றார்.
சரத்குமார் என்பவர், “நான் சென்னை பெரம்பூரை சேர்ந்தவன். நான் இதில் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தி இருந்தேன். நான் மட்டும் அவ்வளவு பணத்தையும் செலுத்தி இருந்தேன். என்னை நம்பி 4 பேர் பணம் செலுத்தினார்கள். அவர்கள் குறைந்த அளவுதான் பணம் முதலீடு செய்திருந்தனர். ஒரு மாதத்தில் பணம் செலுத்திவிடலாம் என நம்பி அதிகளவு முதலீடு செய்துவிட்டேன். நண்பர் மூலமாக இந்த செயலியை உபயோகிக்க தொடங்கினேன்” என்றார்.
குமாரசாமி என்பவர், “15 நாளில் 4 லட்சம் வரை முதலீடு செய்துள்ளேன். இப்பணத்தை இரு வேறு கணக்கின் மூலம் முதலீடு செய்திருந்தேன். நாம் போன் செய்தால் எடுக்க மாட்டார்கள். மெசேஜ் மட்டுமே செய்ய வேண்டும். அதேபோல் மெசேஜ் அனுப்பினால் அனைத்து மெசேஜ்களுக்கும் 20 நிமிடங்களுக்குள் பதிலளித்துவிடுவார்கள். 4 லட்சமும் இதில் கடன் வாங்கிதான் முதலீடு செய்துள்ளேன்” என்றார்.
இவர்களைப்போல, இன்னும் பலரும் இதில் ஏமார்ந்துள்ளனர். அனைவரும் கூறியது, ‘குறைந்த நாட்களில் அதிக லாபம் என்ற நோக்கத்தில்தான் இதில் முதலீடு செய்தேன். ஏமார்ந்துவிட்டேன்’ என்பதே. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளீர்களா என்று நாம் கேட்ட போது ஒரு சிலர் மட்டுமே புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
பணத்தை இழந்தவர்களில் அதிகமானோர் நண்பர்கள் அல்லது உறவினர்களின் ரெஃபரல் மூலம் இணைந்தவர்கள். பலரது தொலைபேசி எண்கள் டெலகிராம் மூலமும் வாட்சாப் க்ரூப்களின் மூலமும் பெறப்பட்டுள்ளன என்கின்றனர் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்.
காவல்துறையும் அரசும் இது குறித்தான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி செய்தாலும் ஏமாற்றும் நோக்கில் செயல்படுபவர்கள் தொடர்ந்து இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்ட வண்ணம் தான் உள்ளனர்.
எது எப்படி இருந்தாலும் மோசடி செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இங்கிருக்கும் ஒரே கோரிக்கை. தொடர்கதையாகும் இவை அனைத்தையும், தடுக்க வேண்டியது அரசின் கடமை!