குற்றம்

’முதலீட்டை இரட்டிப்பாக்கலாம்’ -ஆசை வார்த்தையில் சிக்கும் மக்கள்; அரங்கேறும் செயலி மோசடிகள்

’முதலீட்டை இரட்டிப்பாக்கலாம்’ -ஆசை வார்த்தையில் சிக்கும் மக்கள்; அரங்கேறும் செயலி மோசடிகள்

Sinekadhara

செல்போன் செயலிகள் மூலம் ஒரு மாதத்தில் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம் என பொதுமக்களை ஆசை வலையில் சிக்கவைத்து பல லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

செல்போன் மூலமே அனைத்து வேலைகளையும், தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும் சூழல் நிலவுகிறது. இதை பயன்படுத்தி செல்போன் மூலம்தான் பல்வேறு மோசடிகளும் அரங்கேறுகிறது. அதன் ஒரு பகுதியாக Power Bank, Tesla Power Bank ஆகிய செல்போன் செயலிகள் மூலம் மோசடி நபர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்த செயலிகளை உருவாக்கி அவற்றின் விளம்பரங்களை இணையதளங்களில் பதிவிட்டு "நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை ஒரு மாதத்தில் இரட்டிப்பாக்கலாம், மூன்று மடங்காக்கலாம்" என பண மோசடியில் சிக்க வைக்கின்றனர். விளம்பரங்களைப் பார்த்து அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு அந்த செயலியை பதிவிறக்கம் செய்து அவர்களை தொடர்பு கொள்பவர்களிடம் "குறைந்த முதலீடு, அதிக லாபம்" எனவும் மணி கணக்கு முதலீடு, நாள் கணக்கு முதலீடு என்ற பல்வேறு வகைகளில் அவர்களை பண முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி வருவதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் அவர்களின் பண முதலீடு செய்ய தங்கள் வங்கிக் கணக்கை கொடுக்காமல் Google-Pay, PhonePe, PayTM போன்ற இணையவழி பணபரிவர்த்தனை செயலிகளையே பரிந்துரைக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் நம்பி செயலிகள் மூலம் பணம் செலுத்தும் வகையில் இனிக்க இனிக்க நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளைச் சொல்லி முதற்கட்டமாக சிறிய தொகையை இரட்டிப்பாக்கி திருப்பி அளித்துவிட்டு பின் அதை நம்பி பெரிய முதலீட்டை வாடிக்கையாளர்கள் செலுத்தும்போதுதான் மோசடி கும்பலின் விஸ்வரூபம் வெளிவருகிறது.

பண மோகத்தில் அவர்கள் யார்? எங்கு இருக்கிறார்கள்? எனத் தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு பெரிய தொகையை முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு லாபத்திற்கு பதில் ஏமாற்றமே பரிசாக மிஞ்சுகிறது என்பதே வேதனையின் உச்சம். இந்த மோசடி செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போதே வாடிக்கையாளர்களின் செல்போன் தரவுகளைத் திருடி அவர்களின் தொடர்பில் உள்ளவர்களுக்கும் செயலியை பதிவிறக்கம் செய்யும் Link-ஐ அனுப்பி தங்களின் மோசடி நடப்பதும் அரங்கேறுகிறது.

Power Bank செயலி மூலம் லட்சக் கணக்கில் பணம் கட்டி ஏமாற்றப்பட்டதாக 34 பேரும், Tesla Power Bank செயலி மூலம் ஏமாற்றப்பட்டதாக 3 பேரும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் தனித் தனி வழக்குகளாக பதிவு செய்து காவல் துறையினர் தற்போது புலன் விசாரணையை துவங்கியுள்ளனர். ரிசர்வ் வங்கி சட்ட திட்டங்களின்படி செயல்படும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் மட்டுமே பாதுகாப்பாக முதலீடு செய்து பலனடைய வேண்டும் எனவும், போலியான முன்பின் தெரியாத செயலிகளை பதிவிறக்கம் செய்து அதனை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் எனவும் பொதுமக்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.