திருப்பூரில் தகாத உறவுக்காக அக்காவை தங்கை கொன்ற சம்பவத்தில், பென் கேமராவின் மூலம் முழு உண்மை தெரியவந்துள்ளது.
திருப்பூர் இடுவம்பாளையம் அருகேயுள்ள காமாட்சி நகர் பகுதியில் திருவண்ணாமலையை சேர்ந்த பூபாலன் மற்றும் நதியா தம்பதியினர் தங்களது இரு குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கின்றனர். பூபாலன் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியின் தங்கை ரேகா. இவர் கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அக்காவின் கணவர் வீடு, சொத்து என பண வசதியுடன் இருந்ததால், அவருடன் சேர்ந்து வாழ ரேகா திட்டமிட்டிருக்கிறார்.
ஏற்கெனவே நாகராஜ் என்பவருடன் ரேகாவிற்கு தகாத உறவு இருந்துள்ளது. இதை அறிந்த கணவர், ரேகாவை கண்டித்துள்ளார். ஆனால் ரேகா திருந்தவில்லை என்பதால், அவரை கண்காணிக்க படுக்கையறை உள்ளிட்ட மூன்று இடங்களில் பென் (எழுதுகோல்) கேமராவை ரகசியமாக வைத்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட சண்டை தீவிரமடைய ரேகாவை விட்டு, அவரது கணவர் 2 வருடத்திற்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். ஆனால் அவர் வைத்துவிட்டு போன பென் கேமரா அப்படியே இருந்துள்ளது.
இது தெரியாமலே பல முறை நாகராஜூடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார் ரேகா. இந்நிலையில் ரேகா கணவனை பிரிந்து வாழ்ந்து வந்ததால், அவரது அக்கா நதியா பண உதவிகள் செய்துள்ளார். நாளடைவில் பணத்தை நதியாவின் கணவர் பூபாலன், ரேகாவின் வீட்டிற்கு வந்து கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அவ்வாறு வரும் போது அக்காவின் கணவர் பூபாலனிடம் ஆசை வார்த்தை பேசி மயக்கியுள்ளார் ரேகா. பின்னர் அக்காவின் கணவர் என்று பாராமல், பூபாலனிடமும் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் ரேகாவின் கணவர் விட்டுச்சென்ற பென் கேமராவில் பதிவாகிக் கொண்டிருந்துள்ளன. இந்நிலையில் தான் நதியாவின் 4 அரை வயது மகள் ரேகாவின் வீட்டிற்கு விளையாட வந்துள்ளார். அப்போது தற்செயலாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பென் கேமராவை குழந்தை எடுத்துச் சென்று, அம்மா நதியாவின் கையில் கொடுத்துள்ளது.
அதை கம்ப்யூட்டரில் பொறுத்திப் பார்த்துள்ளார் நதியா. அப்போது தனது தங்கை ரேகாவுடன், யாரோ ஒரு நபரும் (நாகராஜ்), தனது கணவரும் தகாத முறையில் உறவு கொள்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து தனது தங்கையை கடுமையாக எச்சரித்துள்ளார். கணவரையும் எச்சரித்துள்ளார். பின்னர் ரேகா, அந்தப் பென் கேமராவை தன்னிடம் தருமாறு நதியாவிடம் கேட்டு கெஞ்சியுள்ளார். ஆனால் கேமராவை தர மறுத்துவிட்டார் நதியா.
இதையடுத்து கிரிமினலாக சிந்தித்த ரேகா, தனது தகாத நண்பர் நாகராஜின் உதவியுடன் அக்காவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். பின்னர் அக்காவின் கணவரை இரண்டாவது திருமணம் செய்து தனது வாழ்க்கையை வசதியுடன் வாழவும் நினைத்துள்ளார். இதற்காக நாகராஜை யாரும் இல்லாத நேரத்தில் அக்காவின் வீட்டுக்கு அனுப்ப, அவரும் நதியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் போலீஸாருக்கு குழப்பத்தை ஏற்படுத்த, கொலை செய்துவிட்டு நதியாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை எடுத்துச் சென்றுள்ளார் நாகராஜ். ஆனால் இதுவும் ரேகாவின் திட்டம் தான்.
இருப்பினும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீஸாருக்கு, ரேகாவின் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே ரேகாவிடம் விசாணையை மேற்கொண்டர் போலீசார். அப்போது கொலை நடந்த அன்று மாலை தாடியுடன் ஒருவர் வந்து முகவரி கேட்டதாகக் கூறியிருக்கிறார் ரேகா. இதனையடுத்து ரேகா மீது போலீசாருக்கு இன்னும் சந்தேகம் தீவிரமானது. உடனே ரேகாவின் செல்போனை பெற்ற போலீசார், அதில் வந்த அழைப்புகளை சோதனை செய்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருடன் ரேகா அதிகளவில் பேசியது தெரிய வந்தது. குறிப்பாக கொலை நடந்த அன்று அதிகளவில் நாகராஜனுடன் பேசியுள்ளார்.
இதனடிப்படையில் போலீசார் நாகராஜிடம் சந்தேகமடைந்து விசாரணை மேற்கொண்ட போது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். அவரது கையில் இருந்த வெட்டு காயம் குறித்து போலீசார் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் நாகராஜ் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.