பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை தள்ளிவிட்டு கொலைசெய்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலைசெய்த சதீஷ்குமார் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மூன்று முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசிவிட்ட காவல்துறையினரின் அலட்சியமே இரு உயிரிழப்பிற்கு காரணம் என சத்யா குடும்பத்தார் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு மாணவி சத்யா கொலைவழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். சிபிசிஐடி அதிகாரிகள் டிஎஸ்பி செல்வகுமார் மற்றும் புருஷோத்தமன் தலைமையில் ஐந்து பெண் காவலர்கள் கொண்ட குழு சம்பவம் நடைபெற்ற பரங்கிமலை ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் விசாரணையை தொடங்கினர்.
ரயில்வே துறை ஊழியர்கள் மற்றும் சம்பவம் நடந்தபோது அங்கு பணியில் இருந்த ரயில்வே காவலர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படை காவலர்கள் யார்? யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள 28 சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்ய உள்ளனர். ரயில் நிலைய பிளாட்பாரத்துக்குள் இருவரும் நடந்து வரும் காட்சி, சம்பவம் நடைபெற்ற இடம், ரயில் நிலையத்துக்குள் நுழைந்த பிறகு எத்தனை நிமிடங்களுக்கு பின் இந்த கொலை சம்பவம் நடைபெற்றது என்பதற்கான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
ரயில் நிலைய அலுவலரிடம் விசாரணை நடைபெற்று தொடர்ச்சியாக ரயில் ஓட்டுநர் கோபால், ரயில்வே GUARD மற்றும் சத்யாவின் தோழிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். ரயில் விபத்து ஏற்பட்டபோது உடலை தூக்கிய ரயில்வே ஊழியர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.