குற்றம்

முன்பகையால் முதியவரை அடித்துக்கொலை - ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர், மாமனார் கைது

முன்பகையால் முதியவரை அடித்துக்கொலை - ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர், மாமனார் கைது

Sinekadhara

உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி மன்றத் தலைவி மற்றும் அவரது கணவர் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று இருவரை கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த எடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(75). இவர் BSNL நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அங்கு கிராமத்தில் உள்ள நூலகத்தில் நூலகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரியசாமியின் மருமகளான கோமளவள்ளி தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி மணிமேகலை போட்டியிட்டுள்ளார். இதில் மணிமேகலை வெற்றிபெற்று ஊராட்சி மன்றத் தலைவராக பதவிவகித்து வருகிறார்.

இந்நிலையில் இரு தரப்பினருக்கும் தேர்தல் முன்விரோதம் காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று, 12.5.22 அன்று 4 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த பெரியசாமியை ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் உள்ள மணிமேகலை, அவரது கணவர் விஷ்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் என கும்பலாக சேர்ந்து கட்டையால் தாக்கி உள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அவரது இளைய மகன் கோபி மற்றும் அவரது மனைவி சங்கீதா, மூத்த மருமகள் கோமளவல்லி ஆகியோர் தடுக்க முயற்சி செய்திருக்கின்றனர். அப்போது அவர்களையும் அந்த கும்பல் தாக்கியிருக்கிறது.

இதில் படுகாயமடைந்த பெரியசாமி அப்போதே இறந்துவிட்டார். பெரியசாமியின் மகன் கோபி மற்றும் மருமகள் சங்கீதா இருவரும் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்துபோன பெரியசாமியின் உடலை பெண்ணாடம் போலீசார் கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தேர்தல் முன் விரோதம் காரணமாக முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணையை கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளியான ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் விஷ்ணு மற்றும் ஊராட்சி மன்ற தலைவியின் மாமனாரும் திமுக கிளைச் செயலாளருமான ஜோதிவேல் ஆகிய இருவரை பெண்ணாடம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கொலை சம்பவத்திற்கு காரணமான மூன்று பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.