குற்றம்

பல்லடம்: அசாம் மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை.!

பல்லடம்: அசாம் மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை.!

webteam

அசாம் மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், அதே மாநிலத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எம்.ஊத்துக்குளி பகுதியில் உள்ள பிரபல டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திருமணம் ஆகி இரண்டு வருடங்களே ஆன திரிபுல் இஸ்லாம் என்பவர், தனது 21 வயது நிரம்பிய மனைவியுடன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு திரிபுல் இஸ்லாம் வேலைக்கு சென்று விட்ட நிலையில், அந்நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியே இருந்துள்ளார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களான அமருள் இஸ்லாம், அனீப் அலி மற்றும் இப்ராஹிம் அலி ஆகிய மூவரும் வீட்டிற்குள் புகுந்து தனியே இருந்த பெண்ணுக்கு பாலியல் பலாத்கார தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பெண் கத்தி சத்தம் போட்டதால் அவர்கள் மூன்று பேரும் அங்கிருந்து ஓடி சென்று விட்டனர். இதுகுறித்து சக தொழிலாளர்கள் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற மகளிர் காவல் ஆய்வாளர் பர்வீன் பானு தலைமையில் ஆன போலீசார் அப்பெண்ணை மீட்டு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சையும் பரிசோதனையும் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் வீட்டில் தனியே இருந்த அசாம் பெண்ணுக்கு பாலியல் பலாத்கார தொல்லை கொடுத்த புகாரின் பேரில் அமருள் இஸ்லாம், அனீப் அலி மற்றும் இப்ராஹிம் அலி ஆகிய மூவரையும் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.