குற்றம்

பழனி: தலைமறைவான கொலைக் குற்றவாளி 12 ஆண்டுகளுக்கு பிறகு தானாக வந்து சரண்!

பழனி: தலைமறைவான கொலைக் குற்றவாளி 12 ஆண்டுகளுக்கு பிறகு தானாக வந்து சரண்!

webteam

பழனியில் நடந்த கொலைவழக்கில் தண்டனை பெற்று, தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி 12ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை அனுபவிப்பதற்காக நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்‌ பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. கடந்த 2009ம்ஆண்டு இவருக்கும், ஆந்திர மாநிலம் அனந்தபுரி மாவட்டம் கார்லாபின்னே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்குமிடையே பழனி அடிவாரத்தில் உள்ள தண்டபாணி நிலையம் அருகே தகராறு‌ ஏற்பட்டது. தகறாரில் குடிபோதையில் இருந்த ராமகிருஷ்ணன்‌ அண்ணாதுரையை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இது தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ராமகிருஷ்ணன் சிலமாதங்களில் பிணையில் வெளியே வந்ததும் ஆந்திராவில் உள்ள சொந்த ஊருக்கு சென்று வருவதாக கூறி சென்றவர்‌ தலைமறைவானார்.

இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு கொலைவழக்கில்‌ குற்றம்‌சாட்டப்பட்ட ராமகிருஷ்ணன்‌ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு ராமகிருஷ்ணனுக்கு 9ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் தலைமறைவான ராமகிருஷ்ணனை போலீசார்‌ எங்கு தேடியும்‌ கடந்த 12 ஆண்டுகளாக‌ கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கொலைவழக்கில் தண்டனை பெற்ற ராமகிருஷ்ணனை பிடிக்க பழனி நகர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் கிருஷ்ணசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடிவந்த நிலையில்‌, கொலைக்குற்றவாளி ராமகிருஷ்ணன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று தானாக சரணடைந்திருக்கிறார்.

9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தலைமறைவாகாமல் இருந்திருந்தால் தண்டனைகாலம் முடிந்து தற்போது விடுதலையே ஆகியிருக்கலாம். இந்நிலையில் 12ஆண்டுகளாக‌‌ தலைமறைவாக வாழ்ந்துவிட்டு தற்போது நீதிமன்றத்தில் சரணடைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.