Private school pt desk
குற்றம்

மதுரை: உருது பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் - வடமாநில சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

மேலூர் அருகே உருது பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

webteam

செய்தியாளர்: ரமேஷ்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கத்தப்பட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உருது பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை, பீகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தைச் சேர்ந்த ஷாநவாஸ் (09) மற்றும் முகமது சம்சத் (13) ஆகிய இரு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் முகமது சம்சத், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஷாநவாஸை குத்தியுள்ளார்.

Death

இதில் பலத்த காயமடைந்த ஷாநவாஸ் உயிரிழந்த நிலையில், உடலை அங்குள்ள கழிவு நீர்த் தொட்டியில் போட்டு மூடி மறைத்துள்ளார் முகமது சம்சத். இதனையடுத்து இரவில் காவலாளி, ஷாநவாஸை காணவில்லை என மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாலை நேரத்தில் இரு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக சக மாணவர்கள் கூறியதைத் தொடர்ந்து, முகமது சம்சத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஷாநவாஸை கொலை செய்து கழிவுத் தொட்டியில் மூடி மறைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து தொட்டியில் கிடந்த உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து முகமது சம்சத்தை கைது செய்துள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.