Agent Ramesh pt desk
குற்றம்

தி.மலை: ஆன்லைன் லாட்டரி விற்பனை வழக்கு - முக்கிய ஏஜென்ட் கைது.. வங்கிக் கணக்குகள் முடக்கம்!

webteam

செய்தியாளர்: R.ஆஜா செரிப்

தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வந்தவாசி பொட்டி நாயுடு தெருவைச் சேர்ந்த அருண் என்ற அருணாச்சலம், ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றதாக தனிப்படை காவல்துறையினரால் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அலைபேசிகளை ஆய்வு செய்ததில், அவர் வாட்ஸ் அப் குழுக்களை அமைத்து செயல்பட்டது உறுதியானது. மேலும் சட்டவிரோத ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈட்டிய பணத்தில், வந்தவாசியில் அடுத்தடுத்து சொகுசு வீடுகளை கட்டியதும் தெரியவந்தது.

ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததாக இருவர் கைது

அந்த வீடுகளில் நடத்திய சோதனையில், கணக்கில் காட்டப்படாத, கொத்துக் கொத்தான நகைகளையும் கட்டுக்கட்டான பணத்தையும் கண்டுபிடித்து, காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு, செங்கல்பட்டு ஏஜெண்டாக இருந்த மாற்றுத்திறனாளியான சையது இப்ராஹிம், காஞ்சிபுரம் ஏஜெண்ட்டாக இருந்த, காஞ்சிபுரம் பல்லவன் நகரைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டம் பண்டாரப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்லைன் லாட்டரி விற்பனை குறித்து, அருணை நேரில் சந்திக்க வந்தவாசிக்கு வந்தபோது, ரமேஷ் சிக்கியுள்ளார். இவர், 23 ஏஜெண்ட்களுக்கு ஆன்லைன் மூலம் லாட்டரிகளை விநியோகித்தது விசாரணையில் தெரியவந்தது. ரமேஷிடம் மடிக்கணினி, அலைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Money seized

இந்த வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள அருணின் பெயரில் உள்ள 3 வங்கிக் கணக்குகள், அவரது மனைவியின் பெயரில் உள்ள 2 வங்கிக் கணக்குகள், சையது இப்ராஹிம் மற்றும் ரமேஷின் வங்கிக் கணக்குகள் என மொத்தம் 7 வங்கிக் கணக்குகளை காவல் துறையினர் முடக்கியுள்ளனர்.