குற்றம்

சாலையோரம் தங்குவதில் தகராறு : முதியவரை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞர்

webteam

சென்னையில் சாலையோரம் தங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில் முதியவரை கொன்ற வடமாநில இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை வெள்ளாளர் தெருவில் வசித்தவர் கிருஷ்ணமூர்த்தி (60). இவர் தலையில் பலத்த காயத்துடன் நேற்று முன்தினம் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதலில் விபத்தில் அடிப்பட்டு இருக்க கூடும் என நினைத்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது கேமராவில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முதியவரை ஓட ஓட விரட்டி கல்லால் பலமுறை தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

 கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அதே பகுதியில் சுற்றி திரிந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் கைது விசாரணை செய்தனர். இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் என்பதும், வீட்டில் சண்டையிட்டு ரெயில் மூலம் சென்னை வந்தவர் என்பதும் தெரியவந்தது.

பின்னர் சென்டரல் ரெயில் நிலையத்தில் இருந்து வடமாநில இளைஞர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை வந்து சேர்ந்ததும், பல தொழிற்சாலையில் வேலைக்கேட்டும், வேலைக்கிடைக்காததால் சாலையோரத்தில் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சாலையோரத்தில் தங்குவது தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்திக்கும், அந்த இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வடமாநில இளைஞர் முதியவர் கிருஷ்ணமூர்த்தியை ஓட, ஓட விரட்டி கல்லால் அடித்ததில் அவர் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் விஜயராகவன், வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தார். இதற்கிடையில் அந்த முதியவரை கல்லால் சரமாரியாகதாக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.