குற்றம்

பிரபல உணவகத்தின் ஃபிரிட்ஜில் கெட்டுப்போன இறைச்சி, முந்தைய நாள் புரோட்டா, நூடுல்ஸ்

Sinekadhara

காரைக்காலில் பிரபல உணவகத்தில் ஆய்வுசெய்த அதிகாரிகள் அங்கு குளிர்சாதனப்பெட்டியில் கெட்டுப்போன இறைச்சி, முந்தைய நாள் புரோட்டா, நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுகளை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல உணவகத்தில் உணவுகள் சரியில்லை என பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையான அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவகத்தின் வெளியே சுத்தமாக இருந்ததை அடுத்து சமையல் அறைக்குச்சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியை ஆய்வு செய்தபோது பல நாட்களான கெட்டுப்போன ஆடு மற்றும் கோழியின் இறைச்சி, முந்தைய நாள் சுட்ட புரோட்டா மற்றும் அதன் மாவு, நூடுல்ஸ், பிரைடு ரைஸ் உள்ளிட்ட ஏராளமான உணவுப்பொருட்கள் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் காலாவதியான பொருட்களைவைத்து சமைத்து வந்ததும் அம்பலமானது. அதுமட்டுமல்லாமல் கெட்டுப் போன காய்கறிகளை வைத்து சமையல் செய்ததும் தெரியவந்தது. உடனடியாக கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களை பறிமுதல் செய்து அதன்மீது பினாயில் ஊற்றி அழித்தனர்.

இதுகுறித்து உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் சரமாரி கேள்வி எழுப்பிய அதிகாரிகள் கடை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காட்சிகளை கண்ட உணவருந்த வந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.