உளுந்தூர்பேட்டை ஏடிஎம்-ல் பணம் எடுக்க வந்த பெண்ணிடம் நூதன முறையில் கொள்ளையடித்த இளைஞர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, இவர் நேற்று உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்காகச் சென்றுள்ளார் அப்போது பணம் எடுக்கும் வழிமுறைகள் தெரியாததால் அங்கு வந்த இளைஞர் ஒருவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து அந்த இளைஞர் ஏடிஎம் கார்டை மெஷினில் போட்ட பின்பு ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டறிந்து அதை தவறாக பதிவிட்டு பணம் ஏதும் இல்லை என்று கூறி அந்த ஏடிஎம் கார்டுகளுக்கு பதிலாக போலியான ஏடிஎம் கார்டை கலைச்செல்வியிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து வேக வேகமாக அந்த இளைஞர் கிளம்பி விட்டார்.
இதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே கலைச்செல்வியின் செல்போனுக்கு 56 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கலைச்செல்வி, உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து பணத்தை எடுத்துச் சென்ற இளைஞர் எந்தெந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்து இருக்கிறார் என்பதை ஆய்வு செய்தனர்.
அப்போது மங்கலம்பேட்டையில் உள்ள ஏடிஎம் மெஷினில் பணம் எடுத்தது தெரியவந்தது இதனையடுத்து உளுந்தூர்பேட்டையில் ஏடிஎம்-மில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.