புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றிய புகாரில் கைது செய்யப்பட்டவர் தமிழ்ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த கவுரிசங்கர் என்ற இளைஞர், 100க்கும் மேற்பட்ட இணையதள முகவரிகளில் புதிய திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததாக போலீஸாருக்கு திரைத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, கவுரி சங்கரை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்தனர். தகவலறிந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், திருவல்லிக்கேணி காவல் நிலையம் வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு முழுவிவரம் தெரியவரும் என கூறினார்.
இந்நிலையில் இந்த நபர் தமிழ்படங்களை பதிவேற்றம் செய்யும் பிரபல தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் என்றும், இதேபோன்று மற்றொரு இணையதளமான தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் என்றும் செய்திகள் பரவின. இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் அந்த குறிப்பிட்ட இரு இணையதளத்தின் அட்மின் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த செய்தியை அந்த குறிப்பிட்ட இணையதளமே மறுத்துள்ளது. மேலும் தங்களின் பெயர்களை பயன்படுத்திக்கொண்டு அப்பாவிகளை கைது செய்வதை காவல்துறை நிறுத்த வேண்டும் எனவும் அந்த இணையதள அட்மின்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.