குற்றம்

“குழந்தையைக் கடத்த வந்தீயா?” - தொடரும் வடமாநில இளைஞர்கள் மீதான தாக்குதல்

“குழந்தையைக் கடத்த வந்தீயா?” - தொடரும் வடமாநில இளைஞர்கள் மீதான தாக்குதல்

webteam

காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தியும் சேலம் அருகே குழந்தைக் கடத்த வந்ததாக மீண்டும் வடமாநிலத்தவர் ஒருவரை பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில் கட்டிவைத்து தாக்கினர்.

சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே தட்டாஞ்சாவடி பகுதியில் இன்று மாலை வடநாட்டு வாலிபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தண்ணீர் கேட்டுள்ளார். அப்பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர். ஹிந்தியில் பேசியதால் சந்தேகமடைந்த அந்தப் பகுதி மக்கள் அவரை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த நபரின் பாக்கெட்டில் சாக்லெட்டுகள் இருந்துள்ளது. அந்த சாக்லெட்டுகளை அந்த நபரை சாப்பிட சொன்ன போது அவர் மறுத்துவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனால் பொதுமக்களின் சந்தேகம் வலுக்கவே அந்த நபரை மின்கம்பத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை மீட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தியும் தொடர்ந்து நடைபெற்றுவரும் இதுபோன்ற சம்பவங்களால் வடநாட்டை சேர்ந்த வாலிபர்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.