குற்றம் புதியதலைமுறை
குற்றம்

நொய்டா: பணிச்சுமை, கேலிப்பேச்சுகள்... தாங்கமுடியாமல் தனியார் வங்கி ஊழியர் எடுத்த விபரீத முடிவு!

Jayashree A

ஒரு சிலர் புதிதாக கல்லூரிக்கு செல்லும் பொழுதோ அல்லது அலுவலகத்திற்கு செல்லும் பொழுதோ அங்கு இருக்கும் ஒரு சில சீனியர்களின் ரேகிங்கை எதிர்கொள்வர். ரேகிங் சட்டப்படி குற்றம் என்றாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலன்றி பெரும்பாலான ரேகிங் சம்பவங்கள் வெளியே தெரிய வருவதில்லை. அப்படியொரு சம்பவம்தான், பெண் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. அவர் விபரீத முடிவெடுத்தபின், விஷயம் வெளிவந்துள்ளது பெரும் சோகம்.

நொய்டாவைச் சேர்ந்தவர் 27 வயதான சிவானி குப்தா. இவர் நொய்டாவில் தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்திருக்கிறார். எம்பிஏ முடித்த இவருக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஒரு ஏஜென்ஸியின் மூலம் தனியார் வங்கியில் ரிலேஷன்ஷிப் ஆபிசராக வேலை கிடைத்துள்ளது.

மகிழ்ச்சியாக வேலைக்கு சென்றவருக்கு, அங்கு பணிபுரியும் சிலருடன் பழகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தனது வேலையைத் தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வங்கியில் மேளாளர்களால் இவருக்கு பணிச்சுமை அதிகரித்து வந்ததுடன், அங்கிருக்கும் ஊழியர்களில் சிலர் சிவானி குப்தாவிடம் அவதூராக பேசி வந்துள்ளனர். ஒருசிலர் அவரை மனநலம் பாதித்தவர் மற்றும் விவாகரத்தானவர் என்று கூறி சில தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இதில் சிவானி மனமுடைந்து அதீத மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார். அப்பொழுதெல்லாம் அவரை அறியாமல் அவரது கைகள் நடுக்கத்திற்கு ஆளாகி உள்ளன. அது குறித்தும் அங்கு பணிபுரியும் சிலர் அவரை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு ஆறுதலாக அங்கு யாரும் இல்லாத நிலையை சிவானி உணர்ந்து இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் சிவானிக்கும் வங்கியில் பணிபுரியும் வேறொரு பெண்ணிற்கும் இடையே ஒரு சின்ன விஷயத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியநிலையில், கைகலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் அப்பெண் சிவானியை கைநீட்டி அடித்ததாகவும் பதிலுக்கு இவரும் அவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிவானி மேலிடத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் மேலிடத்தில் உள்ளவர்கள் சிவானியை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இவரை வேலையில் இருந்து நீக்குவதாக மெயில் வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சிவானி, காவல் துறையினருக்கு ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு, தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். குடும்பத்தார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

ரேகிங்

போலீசாருக்கு எழுதிய கடிதத்தில், “கடந்த ஆறு மாதங்களாக எனது சக ஊழியர்கள் என்னை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வருகின்றனர். இதற்கு காரணமானவர்களை தண்டிக்கவேண்டும்” என்றுகூறி தனது மேளாளர் உட்பட சிலரின் பெயர்களை இவர் எழுதிவைத்துள்ளார்.

இருப்பினும் அது அவரின் கையெழுத்துதானா என்று பரிசோதனை செய்ய கடிதத்தை காவல்துறையினர் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சக ஊழியர்களின் வாக்குமூலங்களையும் பதிவு செய்வோம் என்று கூறியுள்ளனர்.

இது குறித்து தனியார் வங்கி கூறும் பொழுது, “சிவானி குப்தாவின் குடும்பத்தினருக்கு எங்களின் இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன் எங்கள் நிறுவனத்தில் வன்முறைக்கு இடம் கிடையாது, ஆகவே அதிகாரிகாளின் உதவியுடன் இச்சம்பவம் குறித்து மேல் விசாரணை செய்து வருகிறாம்” என்று கூறியுள்ளனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.