cyber crime web
குற்றம்

’5நாட்களில் 16கோடி திருட்டு’ நொய்டாவில் இயங்கும் வங்கியின் சர்வரை ஹேக்செய்து கொள்ளை! எப்படி நடந்தது?

Rishan Vengai

தற்போதைய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சூழலில் அனைத்திற்கும் ஆன்லைன் பேமெண்ட் பரிவர்த்தனைகளே செயல்முறைபடுத்தப்பட்டு வருகின்றன. அதற்கேற்றார்போல் முன்பு இல்லாத வகையில், ஆன்லைன் பண மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சைபர் கிரைம் போலீஸார் அனைத்துவகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், நாளுக்கு நாள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை திருடுவதற்கு மோசடியாளர்கள் புதிய வழிகளை கண்டுபிடித்துகொண்டே இருக்கின்றனர்.

அந்தவகையில், நொய்டாவில் உள்ள நைனிடால் வங்கியின் செக்டார் 62 கிளையில் சைபர் மோசடி நடந்துள்ளது. வங்கியின் சர்வரை ஊடுருவிய மோசடி நபர்கள், வங்கியில் இருந்த ரூ.16.1 கோடியை கொள்ளையடித்துள்ளனர். நைனிடால் வங்கியின் ஐடி மேலாளர் சுமித் குமார் ஸ்ரீவஸ்தவா, வங்கியின் இருப்புநிலைக் குறிப்பில் உள்ள முரண்பாடு குறித்து நொய்டா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

என்ன நடந்தது?

நொய்டாவில் செக்டார் 62ல் உள்ள நைனிடால் வங்கியில் தகவல் தொழில்நுட்ப மேலாளராகப் பணிபுரியும் சுமித் குமார் ஸ்ரீவஸ்தவா, வழக்கமான இருப்புநிலை சரிபார்த்தலின் போது ​​ரூ. 3 கோடி வித்தியாசம் இருப்பதை கண்டறிந்துள்ளார். முதலில் இந்த பிரச்னை சிஸ்டம் லைனில் ஏற்பட்ட முரண்பாட்டால் தான் வந்துள்ளது என வங்கி அதிகாரிகள் கருதியுள்ளனர், பின்னர் அடுத்தடுத்த விசாரணையில் ஜூன் 16 முதல் ஜூன் 20-ம் தேதிக்கு இடையில் 80-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மூலம் சுமார் ரூ.16 கோடிக்கும் மேலான பணம் டெபிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

cyber crime

வங்கி சர்வரை ஹேக்செய்த மோசடி நபர்கள், மேலாளரின் லாக்-இன் விவரங்களை திருடி மற்ற வங்கிக் கணக்குகளின் RTGS செட்டில்மெண்ட்டின் போது மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மோசடி நடந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தவுடன், வங்கி உடனடியாக கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவை (CERT-IN) எச்சரித்தது. உடன் வங்கி உடனடியாக அனைத்து சந்தேகத்திற்கிடமான கணக்குகளையும் முடக்கியது மற்றும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் KYC செயல்முறையை முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

69 லட்சம் மட்டும் திரும்ப பெறப்பட்டுள்ளது..

வங்கியின் தகவல் தொழில்நுட்ப மேலாளர் சைபர் கிரைமில் புகாரளித்ததின் பேரில் போலீஸார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவிட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்ட போது கொள்ளையர்கள் பயன்படுத்திய ஐபி அட்ரஸ்களை டிராக் செய்து பிடிக்கும் பணி நடந்துவருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மோசடி செய்யப்பட்ட ரூ.16 கோடிக்கும் மேலான பணத்திலிருந்து இதுவரை ரூ.69 லட்சம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்றும், ரூ.16 கோடி இன்னும் மீட்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மோசடி குறித்து பேசிய சைபர் கிரைம் பிரிவின் உதவி போலீஸ் கமிஷனர் விவேக் ரஞ்சன், “நொய்டா செக்டார் 62ல் உள்ள நைனிடால் வங்கியின் ஐடி மேலாளர் சுமித் ஸ்ரீவஸ்தவ், ஜூன் 16 முதல் ஜூன் 20 வரை, அடையாளம் தெரியாத நபர் சர்வரை ஊடுருவி வங்கி மேலாளரின் உள்நுழைவு கடவுச்சொல்லைத் திருடியதாகவும், மோசடி மூலம் சுமார் 16 கோடி ரூபாய் பல்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் புகாரிளித்தார். இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.