குற்றம்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு : 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு : 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

webteam

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் 6 பேர் மீது என்.ஐ.ஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

தமிழக - கேரள எல்லையில் குமரி மாவட்டம், களியக்காவிளை சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த ஜனவரி மாதம் 8 ம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அப்துல் சமீம்(30), தவுபீக்(27), ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து காஜா மொய்தீன்(53), மெகபூப் பாஷா(48), இஜாஸ் பாஷா(46), ஜாபர் அலி(26), உள்பட மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்பதால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ. அரசு தரப்பு வழக்கறிஞர் ஆகியோர் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செந்தூர்பாண்டி முன்னிலையில் 6 பேர் மீதும் 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பெங்களூரில் இருப்பதாகவும் மும்பையில் இருந்து ஆயுதங்கள் வாங்கி வந்ததாகவும் போலீசாரை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு நடந்த படுகொலை என குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த கொலை வழக்கில் சதி வேலையில் ஈடுபட சிம் கார்டுகளை வாங்கி கொடுத்ததாக 12 பேர் மீது கடந்த மாதம் என்.ஐ ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.