ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனையை 12 ரவுடிகளுக்கு நடத்த திருச்சி குற்றவியல் நீதிமன்ற எண் 6 நீதிபதி சிவகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைவருக்கும், 2 மாதத்திற்குள் உண்மை கண்டறியும் சோதனையை நடத்தி முடிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி திருச்சி தில்லை நகரில் நடைப்பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தபோது கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கானது சிபிஐ விசாரித்த நிலையில் எந்த துப்பும் கிடைக்காததால் தற்பொழுது சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், அந்தக் கொலை வழக்கில் சந்தேகத்துக்கிடமான 13 நபர்களிடம் (ரவுடி) உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்6ல் சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்தனர்.
இதில் தென்கோவன் என்கின்ற சண்முகம் என்ற நபர் இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மற்ற 12 நபர்களும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 12 நபர்களில் சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார், சத்தியராஜ், சுரேந்தர், நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து ஆகிய 11 (ரவுடிகள்) நபர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள லெப்ட் செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து 12 ரவுடிகளின் உடல் முழு பரிசோதனை அறிக்கையை திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இம்மனுவை விசாரித்த நீதிபதி சிவக்குமார், “உண்மை கண்டறியும் சோதனைக்கு தென்கோவன் என்கின்ற சண்முகம் சம்மதம் தெரிவிக்காததால் இந்த சோதனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு மீதமுள்ள 12 நபர்களுக்கு இரண்டு மாதத்திற்குள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த 12 பேருடைய வழக்கறிஞர்கள் இந்த சோதனை போது அவர்களுடன் இருக்க அனுமதியும் வழங்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.
இதன்படி, சோதனை நடைபெறும் பொழுது சம்பந்தப்பட்டவர்களிடம் வழக்கறிஞர் உடன் இருக்கலாம். சோதனை நடத்தி முடிக்கும் வரை 12 பேரையும் சிறப்பு புலனாய் குழுவினர் விசாரிக்கக் கூடாது என்ற உத்தரவையும் நீதிபதி வழங்கியுள்ளார். இதற்கான உத்தரவு சான்று பெற்ற பிறகு சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் டெல்லியில் உள்ள உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் தலைமை அலுவலகத்தில் நீதிபதி உத்தரவை சமர்ப்பித்து அதன் பின்னர் இச்சோதனையை தொடங்க உள்ளனர்.