நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வாகன சோதனையின்போது மினி கண்டெய்னரின் உள்ளே இரகசிய அறை அமைத்து சுமார் 12 இலட்சம் மதிப்புள்ள 574 கிலோ குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனைக்கு எடுத்து வந்த ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர், குட்காவுடன் வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குட்கா பொருட்களை மினி லாரியில் எடுத்து வந்து சப்ளை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார், அப்பகுதியில் அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், காருகுருச்சி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மினி கண்டெய்னரைப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது கண்டெய்னர் லாரி உள்ளே எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக இருந்தது.
தங்களுக்கு வந்த தகவலின் உறுதித்தன்மையை நம்பிய காவல்துறையினர், கண்டெய்னரின் ஓட்டுநர் சிவகுமாரை வழக்கமான காவல்துறை பாணியில் விசாரணை நடத்தினர். காலியாக இருந்த கண்டெய்னர் வாகனத்தில் ஏறிய ஓட்டுநர் சிவக்குமார் உள்ளே யாரும் உடனடியாக கண்டறியாதவாறு வாகனத்தின் பின்பகுதி அறைக்குள் இரகசிய அறை ஒன்று அமைத்து இருந்தது தெரியவந்தது. மேற்படி அறையை திறந்து பார்த்ததில் சுமார் 12 இலட்சம் மதிப்புள்ள 574 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததை காவல்துறை கண்டு ஆச்சரியமடைந்தனர்.
இதையடுத்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், புகையிலை பொருட்களை எடுத்து வந்த கரூர் மாவட்டம், சமத்துவபுரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட ஓட்டுநரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.