குஜராத்தில் 8 மாதக்குழந்தையை இரக்கமே இல்லாமல் கொடூரமாக அடித்து தாக்கிய செவிலித்தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்திலுள்ள ராந்தேர் பாலன்புர் பாட்டியா பகுதியில் மிதேஷ் படேல் என்பவர் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளை பராமரிக்க 3 மாதங்களுக்கு முன்பு செவிலித்தாயை நியமித்திருக்கின்றனர். மிதேஷ் படேலும் அவரது மனைவியும் வேலைக்குச் சென்றபிறகு குழந்தைகள் சத்தமாக அழுதுகொண்டே இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இதனால் ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த பெற்றோர் தாங்கள் வெளியே சென்றபிறகு வீட்டில் என்னதான் நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சிசிடிவி கேமிராவை பொருத்தியிருக்கின்றனர்.
சிசிடிவி கேமிராவை பரிசோதித்த பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், தங்களுடைய 8 மாத ஆண்குழந்தையை செவிலித்தாய் கொடூரமாக தொடர்ந்து அடித்ததுடன், கட்டிலில் குழந்தையின் தலையை இடித்து தாக்கிய காட்சிகள் பதிவாகியிருந்தது. மேலும் கொஞ்சகூட இரக்கமே இல்லாமல் குழந்தையின் முடியை சுருட்டி இழுத்த காட்சிகளும் பதிவாகியிருந்தது. உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று பரிசோதித்ததில் குழந்தைக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தற்போது 8 மாத குழந்தை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறது.
இதுகுறித்து படேல் ராந்தேர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் செவிலித்தாய் கோமல் சந்த்லேகரை கைதுசெய்த போலீசார் அவர்மீது கொலைமுயற்சி வழக்கு பதிவுசெய்துள்ளனர். மேலும் கோமலுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதாகவும், அவருக்கு இதுவரை குழந்தைகள் இல்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.