குற்றம்

கொலையும், தற்கொலையும்: ‘இளநீர் வேணுமானு கேட்டேன், கழுத்தை அறுத்துக்கிட்டார்’!

கொலையும், தற்கொலையும்: ‘இளநீர் வேணுமானு கேட்டேன், கழுத்தை அறுத்துக்கிட்டார்’!

webteam

இளநீர் குடிப்பது போல் வந்து, திடீரென அரிவாளை எடுத்து ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருச்செங்கோட்டில் நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, பேங்கர்ஸ் காலனி பகுதியில் லட்சுமி என்ற பெண் காலை 8.30 மணியளவில் வீட்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், லட்சுமியை தாக்கினார். தாக்குதலை தொடர்ந்து அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து லட்சுமியின் தலையில் போட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த லட்சுமி அலறியபடி கீழே விழுந்தார். 

அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வர, தலையில் கல்லைப் போட்ட அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த லட்சுமியை மீட்ட அப்பகுதியினர், சேலம் அரசு மருத்தவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் லட்சுமி இறந்துவிட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்தவர் யார்? என்ன காரணம்? என விசாரிக்க தொடங்கினர். 

இந்த நிலையில் மதியம் 12 மணியளவில், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள இளநீர் கடை ஒன்றிற்கு, இளநீர் குடிப்பது போல் ஒருவர் வந்தார். அவரிடம் அந்த இளநீர் கடை உரிமையாளர் இளநீர் வேண்டுமா? என கேட்டுள்ளார். அதற்குள் அந்த நபர் இளநீர் வெட்டும் அரிவாளை கையில் எடுத்து, தனது கை, கால் மற்றும் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய காவலர்கள், தற்கொலை செய்துகொண்டவர் பெயர் செல்வம் (58) என்பதை, அவரிடம் இருந்த ஆவணங்கள் மூலம் அறிந்தனர். அத்துடன் காலையில் லட்சுமி என்ற பெண்ணை, தலையில் கல்லைப் போட்டு கொன்றவர் இவர்தான் என்பதையும் விசாரணையில் கண்டுபிடித்தனர். கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் தன்னை கைது செய்துவிடலாம் என்று பயந்து, அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.